மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி - மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுரை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார்.

திண்டுக்கல் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான ஆர்.சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதி எம்பியான சு. வெங்கடேசன் மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியில் இயங்கிவரும் இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், மாநில தலைவராகவும் பணியாற்றியவர்.

2011ம் ஆண்டு இவர் எழுதிய முதல் நாவலான “காவல் கோட்டம்” நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சி தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம் கடந்த தமிழ், கதைகளின் கதை, உட்பட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர், மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தவர்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி சிபிஎம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர். சச்சிதானந்தம், அக்கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர். 53 வயது ஆகும் இவர் பி.எஸ்.சி. பட்டதாரி. 37 ஆண்டுகளாக சிபிஎம்மில் இயங்கி வருகிறார்.

1987ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட துணை செயலாளராகவும், திண்டுக்கல் நகர தலைவராகவும் பணியாற்றியவர். 1992ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து 1994-2002 வரை மாவட்ட செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணை செயலாளராக பணியாற்றியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் கிராமம் கட்டச்சின்னாம்பட்டியைச் சேர்ந்தவரான இவர், 26 வயதில் காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு 1996-2006 வரை இரண்டு முறை மக்கள் பிரதிநிதியாக பணியாற்றி இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE