“குமரி மண்ணின் மைந்தராக பிரதமர் மோடி கொண்டாடப்படுகிறார்” - அண்ணாமலை பேச்சு

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி: “400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு வெறும் வாய்ச்சொல் கிடையாது. இந்திய மக்களின் உணர்வு. அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கன்னியாகுமரி மண்ணையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது. இந்த மண்ணில்தான் 1995 டிசம்பர் 11-ஆம் தேதி ஏக்தா ஒற்றுமை யாத்திரையை மோடி ஆரம்பித்தார். தற்போது குமரி மண்ணின் மைந்தராக மோடியை கொண்டாடி வருகிறீர்கள்.

நமது நாட்டை வல்லரசு நாடாக மாற்றுவதற்காக உறுதியுடன் இங்கு வந்துள்ளார். 2047 முடியும்போது இந்தியா ஒரு மிகப் பெரிய வல்லரசு நாடாக மாற வேண்டும். அதற்காக மூன்றாவது முறை மீண்டும் பிரதமர் மோடிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இவரைப் போன்ற அரசியல் தலைவர் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கிடையாது.

குடும்பக் கட்சிகள், ஊழல் கட்சிகள், மக்களை கொள்ளையடித்து தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு, அதாவது அவர்களுடைய குழந்தைகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கக் கூடிய கூட்டணிதான் இண்டியா கூட்டணி.

400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு வெறும் வாய்ச்சொல் கிடையாது. இந்திய மக்களின் உணர்வு. அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார். 1892-இல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார். தற்போது வந்துள்ள பிரதமர் மோடி ‛விஸ்வகுரு'வாக மாறியுள்ளார். 2047-ல் மோடி தலைமையில் இந்தியா வல்லரசு நாடாகும். 3-வது முறையாக மோடி மீண்டும் பிரதமர் ஆவார்” என்று அண்ணாமலை பேசினார்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். திமுக - காங்கிரஸின் இண்டியா கூட்டணியால் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவே முடியாது” என்றார். முழுமையாக வாசிக்க > “திமுகதான் தமிழகம், தமிழ் பண்பாட்டின் எதிரி” - பிரதமர் மோடி பேச்சு @ கன்னியாகுமரி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE