“தேசபக்தியை திமுகவுக்கு யாரும் போதிக்க வேண்டாம்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: "தேசபக்தியை பற்றி திமுகவுக்கு யாரும் போதிக்க வேண்டியது அவசியம் இல்லை. நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை தங்கசாலையில் நடைபெற்ற வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் விரிவாக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக அரசு, இப்படி சென்னையை உயர்த்த நாள்தோறும் புதிய புதிய திட்டங்களாக நிறைவேற்றுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னை எப்படி வெள்ளத்தில் முழ்கியது?. சென்னை மட்டுமா, ஒட்டுமொத்த தமிழகத்தின் நிதிநிலைமையும் மூழ்கடித்துவிட்டு சென்றார்கள்.

அவர்களைப் போன்று தான் 10 ஆண்டு கால பாஜக ஆட்சியும் சென்னைக்கு எதுவும் செய்யவில்லை. தமிழகத்துக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், நாளைக்கு பிரதமர் மோடி கன்னியாகுமரி வரப்போகிறார். எதற்காக வரப் போகிறார்... தமிழகத்துக்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கித் தர வரப் போகிறாறா? இல்லை, ஓட்டு கேட்டு வரப் போகிறார். ஓட்டு கேட்டு வருவதை நான் தவறு என்று சொல்ல விரும்பவில்லை.

சென்னை வெள்ளத்தில் மிதந்த போது, மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்த போது மக்களைப் பார்க்க வராத பிரதமர், ஓட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமாக இருக்கிறதா?. குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பார்த்தாரே, மறுநாளே, நிவாரண நிதி கொடுத்தாரே.

குஜராத்திற்கு ஏன் கொடுத்தீர்கள் என்று நான் கேட்கவில்லை. தமிழகத்துக்கு ஏன் தரவில்லை என்று தான் கேட்கிறேன். குஜராத்துக்கு அன்றைய தினமே நிதி தருவதும், தமிழகத்துக்கு மூன்று மாதம் சென்ற பிறகும் நிதி தர மனதில்லாமல் போவதும் ஏன்?. இதை கேட்டால், நம்மை பிரிவினைவாதி என்று அடையாளம் காட்டுகிறார்கள். நம்மை பிரிவினைவாதி போல் பேசுகிறார்கள்.

அது மட்டுமா, சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணி, திமுக ஆட்சிக்கு வந்த உடனே, பிரதமரை நான் முதல் முறையாக பார்க்கச் சென்றபோது, மெட்ரோ பணிக்கு நிதி கேட்டேன். இப்போது, 3 வருடம் ஆகிறது, என்ன நிலைமை? நமக்கு அடுத்து கேட்ட மாநிலங்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், நமக்கு ஒன்றும் வரவில்லை, தரவில்லை.

நாம் கேட்டுக் கொண்டே இருப்பது என்ன?, மத்திய அரசுக்கு அதிக வரி வருவாய் எங்கிருந்து போகிறது?. தமிழகத்தில் இருந்து போகிறது. நம்முடைய பணம் தான் போகிறது. ஆனால், அதற்கேற்ற மாதிரி திருப்பி தருகிறார்களா? நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், 28 பைசா தான் மறுபடியும் நமக்கு வருகிறது. அதையாவது ஒழுங்காக கொடுக்கிறார்களா? இல்லை.

நிதி கேட்டு கடிதம் எழுதுகிறோம்! எம்.பி.க்கள் எல்லாம், நிதி கொடுங்கள் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். அதற்கு பிறகு தான் அந்த 28 பைசாவையும் கொடுக்கிறார்கள். இதை சொன்னால் நாம் பிரிவினை பேசுகிறோமா. பிரதமர் மோடி அவர்களே... பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம்.

தேசபக்தியை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டியது அவசியம் இல்லை. நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. சீன நாட்டில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, 1962-ம் ஆண்டு, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா.

1971ம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்திய போது, தமிழக சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பை கண்டித்து, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி, 1972-ம் ஆண்டு பாகிஸ்தான் போரின் போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம், நாட்டுக்காக, நாட்டின் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கியவர் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி.

அன்றைய தினம், இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களும் மொத்தமாக வழங்கிய தொகை 25 கோடி! அதில் 6 கோடியை வழங்கியது திமுக அரசு.

அந்தப் போரில், வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு நிதியும் நிலமும் வழங்கியது கருணாநிதியின் அரசு. அதுமட்டுமல்ல, 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது, அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம், மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கிய அரசும் அதே கருணாநிதி அரசு தான். இந்தியாவைக் காப்பதற்கு எங்களை நாங்கள் ஒப்படைத்துக் கொண்டவர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். தமிழகத்தில் கால் பதித்து, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக குரல் கொடுத்து வருபவர்கள் நாங்கள்.

இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை வளர்த்தெடுத்த நாங்கள், உலகின் தலைசிறந்த கூட்டாட்சி நாடாக, மக்களாட்சி நாடாக இந்தியா வளர்ந்து, வளம் பெற வேண்டும் என்பதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு, தமிழக மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும். இது என்ன நியாயம்?.

ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேட்கிறார்கள்?. பத்து ஆண்டுகளில் என்ன சிறப்புத் திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். "பதில் கூறுங்கள் பிரதமர் அவர்களே" கேட்கிறார்கள், மக்கள் கேட்கிறார்கள், நாங்கள் கேட்கவில்லை. மக்கள் கேட்கிறார்கள்.

தமிழகத்தை சீரழித்த அதிமுகவையும், தமிழகத்தை கண்டுகொள்ளாத மத்திய பாஜகவையும் மக்கள் நிராகரிக்க தயாராகிவிட்டார்கள்" என்று பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்