மதுரை: ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறும் நிதி நிறுவன மோசடியை விசாரிக்க தனி புலனாய்வு குழு அமைக்கலாம் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவனம், தமிழகம் முழுவதும் கூடுதல் வட்டி, பணம் இரட்டிப்பு, பணத்துக்கு ஈடாக வீட்டடி மனை தருவதாக கூறி பல ஆயிரம் பேரிடம் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நியோ மேக்ஸ் இயக்குனர்கள் கமலக்கண்ணன், சைமன் ராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் (டான்பிட் நீதிமன்றம்) ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி புகார்தாரர்கள் உயர் நிதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தன. கூடுதல் அரசு வழக்கறிஞர் நம்பிசெல்வன் வாதிடுகையில், "நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 26 நிறுவனங்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 5 முக்கிய வங்கி கணக்குகளில் ரூ.40 கோடி முடக்கப்பட்டுள்ளது" என்றார்.
» மருது சேனை அமைப்பு தலைவரைக் கொல்ல முயற்சி - மதுரையில் ஆதரவாளர்கள் சாலை மறியல்
» லஞ்சம் கேட்டதற்கு எதிராக கும்பகோணம் - பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
இதையடுத்து நீதிபதி, "நிதி நிறுவன மோசடி வழக்குகளில் ஏமாறும் மக்களின் நிலை வேதனை தருகிறது. குற்றவாளிகளை விட பாதிக்கப்பட்ட மக்களின் நிலைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையர்களை நியமனம் செய்தது தவறு.
நிதி நிறுவன மோசடி வழக்கில் வழக்கறிஞர் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது வினோதமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் ஒருபோதும் தப்பித்துவிடக்கூடாது. மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்துவிடலாம் என நினைப்பவர்கள் மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்கும். பாதிக்கப்பட்டவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து நடத்த நீதிமன்றம் அனுமதிக்காது.
நிதி நிறுவன மோசடிகளை தடுக்க உள்துறை செயலகத்துக்கும், பொருளாதார குற்றப்பிரிவுக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை வகுக்கும் நேரம் வந்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிடப்படும். நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் நிறுவன வங்கி கணக்குகள், அந்த கணக்குகளில் உள்ள பண விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை மார்ச் 21-க்கு ஒத்திவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
அரசு வழக்கறிஞருக்கு எதிராக வழக்கு: மதுரை பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் (டான்பிட் நீதிமன்றம்) அரசு வழக்கறிஞர் முகமது இஸ்மாயில் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் நியோமேக்ஸ் வழக்கின் புகார்தாரர் ரவிசங்கர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "நியோமேக்ஸ் மோசடி வழக்கு மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக உள்ள முகமது இஸ்மாயில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோதும், அசையும் சொத்துக்களை திரும்பக் கோரிய மனு விசாரணைக்கு வந்தபோதும் அரசு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் பெற்றனர்.
இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான, தி அமேஸ் பிராபர்ட்டீஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து மதுரை கிழக்கு வட்டம் பாப்பாக்குடி ரூ.2.50 கோடி மதிப்புள்ள 2 பிளாட்டுகளை முகமது இஸ்மாயில் அவரது மனைவி பெயரில் 7.11.2023-ல் பதிவு செய்துள்ளார். இதற்காக டான்பிட் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும், இரு பிளாட்டுகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆனந்தமுருகன், பாஸ்கர்மதுரம் வாதிட்டனர். பின்னர் மனு தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, பொதுத்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago