தூத்துக்குடி: நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்திருப்பது தென்மாவட்டங்களில் பாஜகவுக்கு வரும் மக்களவை தேர்தலில் பலனளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் சரத்குமார் தனது அரசியல் பயணத்தை முதலில் திமுகவில் தான் தொடங்கினார். 1996-ம் ஆண்டு திமுகவில் இணைந்த சரத்குமார், 1998 மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தொடர்ந்து 2001 முதல் 2006 வரை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவில் இணைந்தார். ஓராண்டு மட்டும் அதிமுகவில் பணியாற்றிய அவர், பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி 2007-ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார்.
2 தொகுதிகளில் வெற்றி: 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தென்காசி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் வென்றது. சரத்குமார் தென்காசி தொகுதியில் வென்று 5 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தார். 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற சரத்குமாரின் கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதியை மட்டுமே ஜெயலலிதா ஒதுக்கினார். இந்த தொகுதியில் சரத்குமார் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
அதன் பிறகு சரத்குமாரின் அரசியல் பயணத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலை பாஜக கூட்டணியில் சந்திக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறிய சரத்குமார், திடீரென தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். சுமார் 17 ஆண்டுகளாக நடத்தி வந்த கட்சியை கலைத்துவிட்டு சரத்குமார் பாஜகவில் இணைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
» புதுச்சேரியின் புதிய அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு
» போதைப்பொருள் விவகாரம் | இபிஎஸ், அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு
பலன் தருமா?: சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்திருப்பது, தென் மாவட்டங்களை குறி வைக்கும் பாஜகவுக்கு மக்களவை தேர்தலில் பலன் அளிக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. மக்களவை தேர்தலில் தென் மாவட்டங்களில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற இலக்கோடு பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பிரதமர் நரேந்திர மோடி கடந்த 28-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு வருகை தந்தார். நாளை ( மார்ச் 15 ) கன்னியாகுமரிக்கு வரவுள்ளார்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை தேர்தலில் ஜாதி முக்கிய பங்காற்றும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. தென் மாவட்டங்களில் கணிசமாக உள்ள தலித் வாக்குகளை குறிவைத்து ஜான் பாண்டியனையும், தேவர் சமுதாய வாக்குகளை குறிவைத்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரனையும் பாஜக, தங்கள் கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள நாடார் வாக்குகளை கவர தற்போது சரத்குமாரை தங்கள் கட்சிக்கு பாஜக கொண்டு வந்துள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி. விருதுநகர் மக்களவை தொகுதிகளில் நாடார் சமுதாய வாக்குகளே அதிகம். அதுபோல தனித் தொகுதியான தென்காசியிலும் நாடார் வாக்குகள் கனிசமாக உள்ளது. தென் மாவட்டங்களில் நாடார் சமுதாய வாக்குகளை கவருவதற்கு சரத்குமாரின் வருகை நிச்சயம் மிகப்பெரிய பலமாக இருக்கும் என பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பாஜவின் இந்த நம்பிக்கை நிறைவேறுமா என்பதற்கு மக்களவை தேர்தல் முடிவு தான் பதில் சொல்லும்.
கட்சிக்குள் சலசலப்பு: கட்சியை பாஜகவுடன் இணைப்பது குறித்து கடைசி நிமிடம் வரை கட்சி நிர்வாகிகளிடம் சரத்குமார் கூறவில்லையாம். திடீரென அவர் அறிவித்தது நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'என்னுடன் அனைவரும் வரவேண்டும் என நான் கட்டாயப்படுத்தமாட்டேன். நீங்கள் உங்கள் விருப்பம் போல முடிவு எடுத்துக் கொள்ளலாம்' என நிர்வாகிகளிடம் சரத்குமார் கூறியுள்ளார். பெரும்பாலான நிர்வாகிகள் சரத்குமாரின் முடிவை வரவேற்றுள்ளனர். ஆனால், ஒரு சில நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago