புதுச்சேரியின் புதிய அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியின் புதிய அமைச்சராக திருமுருகன் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி அவரை அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் திருமுருகன், “காரைக்காலை முதன்மை மாவட்டமாக்குவேன்” என்று தெரிவித்தார்.

புதுவை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கடந்த 1 ஆம் தேதி காரைக்கால் வடக்கு தொகுதியைச் சேர்ந்த என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ திருமுருகனை அமைச்சராக நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து திருமுருகன் இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் வளாகத்தில் நடந்தது. தேசியகீதம், தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்த ஆணையை தலைமைச் செயலாளர் சரத்சவுகான் வாசித்தார்.

தொடர்ந்து ஆளுநர் தமிழிசை, திருமுருகனுக்கு அமைச்சராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர் திருமுருகனுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

அமைச்சராக பதவியேற்ற திருமுருகன் விழாமேடையில் முதல்வர் ரங்கசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். ஆளுநர் தமிழிசைக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கினார். அமைச்சர் திருமுருகனுக்கு முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணக்குமார், செல்வகணபதி எம்.பி உள்ளி்ட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வை எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.

அதைத்தொடர்ந்து சட்டப்பேரவைக்கு சென்ற திருமுருகனை, அமைச்சர் இருக்கையில் முதல்வர் ரங்கசாமி அமர வைத்தார். தனது தனிச்செயலர் நியமனம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் திருமுருகனுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை.

அதைத்தொடர்ந்து அமைச்சர் திருமுருகன் கூறுகையில், “காரைக்கால் மாவட்டம் மருத்துவம், விவசாயம், சுற்றுலா என பலதுறைகளில் பின்தங்கியுள்ளது.குறிப்பிட்ட வளர்ச்சி அடையவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. காரைக்காலுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து காரைக்காலை முதன்மை மாவட்டமாக்குவேன். பிரச்சினைகளை சரி செய்து திட்டங்கள் சரியான முறையில் சென்றடைவதற்கான வழிமுறைகளில் இறங்குவேன்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE