அதிமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதியை கேட்கும் ‘தமிழர் தேசம்’ கட்சி

By செய்திப்பிரிவு

சிவகங்கை: அதிமுக கூட்டணியில், சிவகங்கை தொகுதியை தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வக்குமார் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள், தங்கள் பக்கம் வரும் என அதிமுக தலைமை எதிர்பார்த்தது. ஆனால் நடக்கவில்லை. அதேபோல் ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தவிர மற்ற கட்சிகளுடனும் கூட்டணி உறுதியாகவில்லை. மேலும் எஸ்டிபிஐ கட்சி மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமை விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலை நடத்தியது.

இதில் சிவகங்கை தொகுதிக்கு 40 பேர் வரை விருப்ப மனுக்களை கொடுத்தனர். எனினும், ஏற்கெனவே கட்சித் தலைமை முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் மகன் கருணா கரனை நிறுத்த பேசி வந்தது. ஆனால் கூட்டணி பலம் இல்லா தாலும், தேர்தலில் பல கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பதாலும் அவர் சத்தமில்லாமல் ஒதுங்கிக்கொண்டார்.

இதையடுத்து விருப்ப மனு தாக்கல் செய்தவர்களில் ஒன்றியச் செயலாளர்கள் சேவியர் தாஸ், கோபி, மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளர் இளங்கோ, வழக் கறிஞர் காங்கா ஆகிய 4 பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப் பட்டுள்ளது. இதில் அதிமுகவினர் சேவியர் தாஸுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர்.

இதனிடையே அதிமுகவில் தமிழர் தேசம் கட்சித் தலைவரும், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவருமான கே.கே.செல்வக் குமார், சிவகங்கை தொகுதியை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

முத்தரையர் சமூகத்தினர் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிகம் உள்ளனர். மேலும் கே.கே.செல்வக் குமாருக்கு சீட் கொடுத்தால் மற்ற மாவட்டங்களில் உள்ள அவரது சமூக வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கும் என அதிமுகவில் சிலர் அவருக்கு ஆதரவாக தலைமையிடம் பேசி வருகின்றனர். அதே சமயத்தில் அவரை பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக் கிறது.

இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஒரு மக்களவைத் தொகுதிக்கு குறைந்தது ரூ.20 கோடி முதல் அதிகபட்சம் ரூ.40 கோடி வரை செலவாகும். இந்த முறை வேட்பாளர்களுக்கு பெரிய அளவில் உதவ கட்சித் தலைமை தயாராக இல்லை. மேலும் கூட்டணி பலமும் இல்லாததால் கருணாகரன் போட்டியிட தயாராக இல்லை.

இதையடுத்து 4 பேரை மட்டும் கட்சித் தலைமை அழைத்து நேர்காணல் நடத்தியது. அதே சமயம், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.செல்வக்குமாரும் முயற்சிப்பதாக கூறுகின்றனர். கட்சித் தலைமை தான் யாரை நிறுத்துவது என்பதை முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE