புதுச்சேரி - விழுப்புரம் இடையே தனியார் பேருந்து கட்டணம் உயர்வு: கண்டுகொள்ளுமா போக்குவரத்துத் துறை?

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கண்டமங்கலத்தில் நடக்கும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியால் பேருந்துகள் சுற்றிச் செல்கின்றன. இதனால் புதுச்சேரி - விழுப்புரம் இடையேயான தனியார் பேருந்து கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் முதல் புதுச்சேரி வரையிலான என்.எச் 45-ஏ பிரிவின் நான்கு வழிச்சாலை பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக, ரயில்வே துறை ஒப்புதல் அளித்து கண்டமங்கலம் ரயில் பாதையில்,சாலை மேல்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. தங்கு தடையின்றி இப்பணியை நிறைவேற்றவும், சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப் பிற்காகவும், புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் வரை போக்குவரத்து மாற்றியமைக் கப்பட்டுள்ளது.

இதனால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் மதகடிப்பட்டு, வாதானூர் - பத்துக்கண்ணு, வில்லியனூர், புதுச்சேரி வழியாக திருப்பி விடப்படுகிறது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்கள் அரியூர்,சிவராந்தகம், கீழூர், மண்டகப்பட்டு திருபுவனை, விழுப்புரம் வழியாக மாற்றுப் பாதையில் செல்கின்றன. இதனால் பேருந்துகள் சுற்றிச் செல்கின்றன. இதைக் காரணம் காட்டி தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், அரசு பேருந்துகளில் ரூ. 27 வசூலிக்கிறார்கள். ஆனால் தனியார் பேருந்துகளில் ரூ. 30 முதல் ரூ. 35 வரை வசூலிக்கின்றனர். போக்குவரத்துறை இதை கண்டுகொள்வதில்லை என்று தெரிவிக்கின்றனர்.

பணி எப்போது முடியும்?: விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே நடந்து வரும் நான்கு வழிச் சாலை பணியில், முதல் கட்டமாக, விழுப்புரம் - புதுச்சேரி எம்.என்.குப்பம் வரையிலான 29 கி.மீ., சாலைப் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதில், வளவனுார் புறவழிச்சாலை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முதல் கட்டமாக இடது புறத்தில் ( விழுப்புரம் - புதுச்சேரி ) சாலையில் இரண்டரை மாதங்களுக்கு முன் தொடங்கிய பாலம் கட்டுமான பணியில் அடிப்படை கட்டுமான பணிகள் முடிந்து பாலத்தை இணைக்க பெரிய இரும்பு வளைவுகளுடன் கூடிய ‘பவுஸ்டிங் கர்டர்’ கட்டப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கர்டர்கள் கட்டவேண்டும். இப்பணி முடிய இரண்டு மாதங்களுக்கு மேலாகும்.

அதன் பிறகு, ரயில்வே அனுமதி கிடைத்தவுடன், ரயில் பாதை மீது செல்லும் அதிஉயர் மின்னழுத்த ( 25 கி.வா ) இணைப்பை துண்டித்த பின், இணைப்பு பாலம் அமைக்கும் இறுதி கட்டப்பணி நடக்கும். நெருக்கடியான இடம் என்பதால் இப்பணிகள் முடிவடைய பல மாதங்களாகும் என்று தெரிகிறது. இதற்கிடையே, கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணி முடிய இன்னும் பல மாதங்களாகும். ஜூன் மாதத்துக்குப் பிறகு நான்கு வழிச்சாலை பயன்பாட்டுக்கு வரவாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை இந்தச் சூழலே நீடிக்கும். இதனால் உயர்த்தப் பட்ட பேருந்துகளின் கட்டணமும் குறைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

கூடுதல் ரயில்களை இயக்கலாமே..!: பேருந்து கட்டண உயர்வால், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்று வரும் ரயில் நிரம்பி வழிகிறது. இதற்கு ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை குறைவாகவே இயக்கப்படுகிறது. இப்பணி முடியும் வரை சேவையை அதிகப்படுத்த ஆளுநர், முதல்வர் ஆகியோர் ரயில்வே துறையில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE