முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டுவரி சலுகை

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கும் நடப்பு நிதியாண்டில் இருந்து குடியிருப்பு, சொத்து மற்றும் வீட்டுவரி தொகையை திரும்ப பெறும் திட்டம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுத்துறை செயலர் நந்தகுமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

கடந்த பிப்.19-ம் தேதி நிதியமைச்சர் சட்டப்பேரவையில் தனது பட்ஜெட் உரையில் தன்னலமற்ற சேவைகள் செய்துவரும் முன்னாள் படை வீரர்கள் நலனுக்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தற்போது போரில் ஊனமுற்ற படை வீரர் போன்ற சில பிரிவினருக்கு மட்டும் வீட்டுவரித் தொகையை திரும்ப பெறும் சலுகை வழங்கப்படுகிறது. வரும் நிதியாண்டில் இருந்து குடியிருப்புகள், சொத்து வரி, வீட்டுவரித் தொகையை திரும்ப பெறும் இத்திட்டத்தை அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கும் நீட்டித்து வழங்க ஆவண செய்யப்படும். இதனால் 1.20 லட்சம் முன்னாள் படை வீரர்கள் பயன்பெறுவர் என தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், முன்னாள் படை வீரர்கள் நல இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் 1 லட்சத்து 25,507 முன்னாள் படை வீரர்கள் பதிவுசெய்துள்ளனர். தற்போது அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் வீட்டுவரித் தொகையை திரும்ப பெறும் திட்டத்தை நீட்டிப்பதன் மூலம், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். மாவட்டங்களில் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள் செலுத்திய வீட்டுவரி விவரங்கள் கணக்கிடப்பட்டதில் கடந்தாண்டு ஆக.31-ம் தேதி வரை 16,806 முன்னாள் படை வீரர்கள் ஓர் அரையாண்டுக்கு தோராயமாக ரூ.2.28 கோடி வீட்டு வரியாக செலுத்தியுள்ளனர்.

அதன்படி ஆண்டுக்கு தோராயமாக ரூ.5 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இத்தொகையை முன்னாள் படை வீரர்கள் நிதியில் இருந்து ஈடு செய்யலாம் என்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களுக்கு நீட்டிப்பு செய்யலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

இந்த பரிந்துரையை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, நடப்பு நிதியாண்டில் இருந்து குடியிருப்புகள், சொத்து, வீட்டுவரித் தொகையை திரும்ப பெறும் திட்டம் அனைத்து முன்னாள் படைவீர்களுக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த சலுகையை பெற முன்னாள் படை வீரர் தமிழகத்தில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருக்க வேண்டும். அவரது சொந்த வீடு அதாவது அவர் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தும் கட்டிடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும். வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின், மறுவேலைவாய்ப்பு முறையில் மத்திய, மாநில அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், மறு வேலைவாய்ப்பு பணியில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE