உதகையில் உயிரிழந்த வடமாநில தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: உதகையில் கட்டுமான பணியின்போது மண்ணில் புதைந்து உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்விபத்தில், காயமடைந்த மற்றொரு தொழிலாளிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், பாபுஷா லைன் பகுதியில் இன்று மார்ச் 13 முற்பகல் தனியாருக்குச் சொந்தமான கட்டுமானப் பணியின்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து இருவர் சிக்கிய விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (22) என்பவர் மீட்கப்பட்டு உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். | விரிவாக வாசிக்க > உதகையில் கட்டுமான பணியின்போது மண்ணில் புதைந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழந்தவரின் உடலை தமிழக அரசின் சார்பாக அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க மாவட்ட ஆட்சியரை உரிய ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன்.மேலும், இவ்விபத்தில் காயமடைந்து உதகை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சகிர் (25) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE