4 கல்லூரி மாணவர்கள் பலி; இன்னும் எத்தனை உயிர்களை இழக்க போகிறோம்? - ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக 30 ஆயிரமாகவும், சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 7 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று செங்கல்பட்டு அருகே பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்த சரக்குந்துடன் உரசியதில், படியில் பயணித்த 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் வேகமாக சென்று நின்ற பேருந்து, நின்று கொண்டிருந்த சரக்குந்துடன் உரசியதில், படியில் பயணித்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 5 மாணவர்கள் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மாணவர்கள் அனைவரும் விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்பவும், கல்வியைத் தொடரவும் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிகளில் தொங்கிக் கொண்டு சென்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தையடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில், நின்று கொண்டிருந்த சரக்குந்துடன் வேகமாக சென்ற பேருந்து உரசியதில், அதில் படிகளில் தொங்கிச் சென்ற 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து உயிரிழந்த மற்றும் காயமடைந்த மாணவர்களின் குடும்பங்களை மட்டுமின்றி, இச்செய்தியைக் கேட்ட அனைவரின் மனங்களையும் பதறச் செய்திருக்கிறது. மாணவர்கள் படியில் தொங்கியவாறு பயணம் செய்ததும், மிக அதிக வேகத்தில் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர், அதே வேகத்தில் சரக்குந்தை உரசியதும் தான் முதன்மைக் காரணங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதை விட மிக மோசமான காரணம் உள்ளது. அது, படிகளில் தொங்கியவாறு தான் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற சூழலை ஏற்படுத்திய தமிழக அரசின் அலட்சியம் தான்.

சென்னை மாநகரில் தொடங்கி, குக்கிராமங்கள் வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் என அனைத்தும் புளிமூட்டைகளைப் போல பயணிகளை அடைத்துச் செல்வதையும், குறைந்தது 20-க்கும் கூடுதலான மாணவர்கள் படிகளில் தொங்கிக்கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் பயணிகளின் தேவைக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் இயக்கப்படாதது தான்.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தொடங்கும் நேரத்திலும், பணி நேரம் முடிவடையும் நேரத்திலும் கூடுதலாக பேருந்துகளை இயக்குவதன் மூலம் தான் மாணவர்கள் படிகளில் தொங்குவதையும், இத்தகைய விபத்துகளையும் தவிர்க்க முடியும். ஆனால், அதை செய்யத் தவறிய அரசும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் தான் இவ்விபத்துகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ற வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஓட்டுநர்கள் பற்றாக்குறை, போதிய வருவாய் இல்லாமை போன்றவற்றை காரணம் காட்டி பல பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. எடுத்துக்காட்டாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் 29.70 லட்சம் தடவை பேருந்து சேவை பாதிக்கப்பட்டதாக -புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ஒவ்வொரு நாளும் 500 பேருந்துகள் சென்னையில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்பது தான் இந்த புள்ளிவிவரம் சொல்லும் செய்தியாகும். கிராமப்பகுதிகளின் நிலைமை சென்னையை விட பல மடங்கு மோசமாக உள்ளது. பல இடங்களில் மாணவர்கள் நிற்கும் பேருந்து நிறுத்தங்களில் இருந்து 300 மீட்டர் தள்ளி தான் பேருந்துகள் நிறுத்தப் படுகின்றன. அவ்வளவு தொலைவு மாணவர்கள் ஓடிச்சென்று பேருந்தில் ஏறும்போதே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

3 பேருந்துகளில் பயணிக்க வேண்டிய மக்கள், ஒரு பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது, படிக்கட்டுகளில் தொங்குவதும், விபத்தில் சிக்குவது தவிர்க்க முடியாதது. இவற்றைத் தடுக்க ஒரே தீர்வு அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குவது தான்.

சென்னையில் 3233 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 2700-க்கும் குறைவான பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 21,000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 18 ஆயிரத்திற்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் படிகளில் தொங்கிச் சென்று எவரும் விபத்துக்குள்ளாவதை இனியும் அனுமதிக்கக் கூடாது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக 30 ஆயிரமாகவும், சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 7 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்