மாநில திட்டக்குழு தயாரித்த 11 சிறப்பு திட்டங்களின் மதிப்பீடு, ஆய்வறிக்கை: முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநில திட்டக்குழு தயாரித்த 11 சிறப்பு திட்டங்களின் மதிப்பீடு மற்றும் ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம், குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் வழங்கினார்.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. அரசின் சிறப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வது, பல்வேறு கருப்பொருள்களில் ஆய்வு மேற்கொள்வது மற்றும் மாநிலத்தில்நிலவிவரும் பல்வேறு சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் தகுந்த கொள்கைகளை வடிவமைப்பது உள்ளிட்டவை மாநிலத் திட்டக்குழுவின் செயல்பாடுகளாகும்.

இந்நிலையில், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 11 திட்டங்கள்தொடர்பான ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தார்.

திட்ட அறிக்கைகள்: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால், அரசு தொடக்க பள்ளிமாணவர்களிடம் ஏற்படும் தாக்கம், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, அதன் அளவு, மாணவர்களின் கல்வி மற்றும் உடல்செயல்பாடுகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், தொற்றா நோய்களுக்கான பராமரிப்பு குறித்த மதிப்பீட்டு ஆய்வு, மக்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சேவை, மருந்துகள் வழங்கப்பட்டதை கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகர்ப்புற மக்களுக்கு முன்னுரிமை: நகர்ப்புற மக்களின் முன்னுரிமைகளுக்கேற்ப நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றம் குறித்துஅறிக்கையில் வலியுறுத்தப்பட் டுள்ளது.

தமிழகத்தின் பழங்குடி கிராமங்களில் அரசு திட்டங்களின் செயல்படுத்தல் திறன் மீதான மதிப்பீட்டு ஆய்வு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளின் பருவ இறுதித்தேர்வு வினாத்தாட்கள் மீதான மதிப்பீட்டாய்வு, மாணவர்களின் கற்றல் வெளிப்பாட்டுத் திறனைமேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெப்ப தணிப்பு உத்திகள்: தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு உத்திகளை தொகுத்து வழங்கியுள்ளது. நகரங்களில் “குறைந்த மாசுஉமிழ்வு மண்டலம்” உருவாக்க வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

தென் மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களின் மேலாண்மை குறித்த அறிக்கை, சுற்றுச்சூழல் சீரழிவைக் குறைப்பதற்கான அறிவியல் தீர்வுகளையும், அவற்றிற்கு சாத்தியமான வழிகளையும் உத்திகளையும் பரிந்துரைத்துள்ளது.

வனத்தை ஆக்கிரமித்துள்ள அந்நிய களை, தாவரங்கள் மற்றும் மர இனங்களை மேலாண்மை செய்வதற்கான அறிவியல், கொள்கைகள் மற்றும் சட்ட அம்சங்கள் ஆராயப்பட்டுள்ளன.

கடற்பாசி விவசாயம்: தமிழகத்தின் கடற்பாசி விவசாயத்தை நிலையான முறையில்மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை தெளிவுபடுத்துவது, கடலோர பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டையும் நோக்கமாக கொண்டுள்ளது.

தமிழகத்தின் காடுகளின் நிலைகுறித்த அறிக்கை இந்திய வனஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்படும் அறிக்கையிலிருந்து, தமிழகம் குறித்த தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு ஆகும்.

இந்த அறிக்கை சமர்ப்பிப்பு நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, திட்டம் வளர்ச்சித் துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அறிக்கை சமர்ப்பித்தபின், செய்தியாளர்களிடம் ஜெ.ஜெயரஞ்சன் கூறியதாவது: காலை உணவு திட்டத்தால் தற்போது 90 முதல் 95 சதவீதம் மாணவர்கள் வருகை உள்ளது. பள்ளிக்கும் குழந்தைகள் விரைவாக வருவதுடன், காலை உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். இதையடுத்தே, இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வுகளை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் செய்து வருகின்றனர். காலை உணவில் இட்லி, தோசை தர அரசு பரிசீலித்து வருகிறது.

அரசுக்கு உள்ள சவால்: நகர்ப்புற வேலைவாய்ப்பை பொறுத்தவரை, நகரம், கிராமம் இடையிலான பகுதிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்வதில் உள்ள சிக்கல்கள் குறித்த பரிந்துரைகள் சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் இயக்கமாக மாறினால் மட்டுமே சீமைக்கருவேல மரங்களை அகற்ற முடியும். இதற்கு தேவைப்படும் வளங்களை உருவாக்குவதே அரசுக்கு உள்ள சவால் என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE