விதிகளில் திருத்தம் செய்தது தமிழக அரசு: 750 ச.மீட்டர் பரப்பு, 8 வீடுகள் வரை கட்டினால் பணி முடிப்பு சான்று தேவையில்லை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 750 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் வரை கட்டப்படும்போது அதற்கு பணி முடிப்பு சான்றிதழ் தேவையில்லை என்பதுடன் கட்டிடத்தின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் அடிப்படையில் தற்போது கட்டிட அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கட்டிமுடிக்கப் பட்ட கட்டிடத்துக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த விதிகளை திருத்த வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இதுதவிர, அதிக உயரமில்லாத அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்றும்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக உரிய விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்று வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விதிகளில், ஏற்கெனவே 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என்றிருந்ததை, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எளிதாக குடிநீர் இணைப்பு: எனவே, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டிடங்களுக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற அவசியம் இல்லை. இதன் மூலம், எளிதாக மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற இயலும்.

அதேபோல், அதிக உயரமில்லாத கட்டிடங்களை பொறுத்தவரை, அக்கட்டிடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அக்குடியிருப்புகளில் அமையும் வீடுகளில் தேவையான வசதிகளை மேற்கொள்ள இயலும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE