போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த தவறியதால் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: போதைப் பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த தவறியதால் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தினார்.

போதைப் பொருட்கள் விற்பனையை திமுக அரசு தடுக்காததைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும், நிர்வாகிகளும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

கட்சித் தொண்டர்கள் கையில் கொடி, போதைப் பொருட்களை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: தமிழகம் போதைப் பொருட்கள் விற்பனை மையமாக மாறியுள்ளது. திமுக அயலக அணி அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக போதைப் பொருட்கள் விற்பனை செய்து பல ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. குறிப்பாக போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கும் முதல்வர் குடும்பத்துக்கும் தொடர்பு உள்ளது.

போதைப் பொருளின் தீமை குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்திய இளைஞர்கள்.

2019-ம் ஆண்டு மலேசியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தியதாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் ராமேசுவரம் -மண்டபம், கொடுங்கையூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருட்களை மத்திய போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

போதைப் பொருட்கள் விற்பனையால் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அடிமையாகின்றனர். போதைப் பொருட்களால் மாநிலத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலை மாற வேண்டும். சட்டம், ஒழுங்கை காக்க திமுக அரசு தவறிவிட்டது.

2010-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தமிழக சட்டப்பேரவையில் திமுக அரசு ஒப்புதல் அளித்தது. இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE