போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்க மக்களுடன் சேர்ந்து பெரிய யுத்தம்: அண்ணாமலை வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க மக்களுடன் சேர்ந்து பெரிய யுத்தம் நடத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறி, திமுக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. அதனால், பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீட்டுக்குவரும் குழந்தைகளின் பைகளில் ஏதாவது இருக்குமோ என்ற அச்சத்தில் தாய் தேடிப் பார்க்கும் அளவுக்கு திமுக அரசு நடந்து கொண்டிருக்கிறது. எந்த தாய்க்கும் இந்த நிலை வராமல் இருக்க பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்.

கடந்த 60 ஆண்டுகளாக மாறி, மாறி வாக்களித்து எந்தப் பயனும் இல்லை. அதனால், போதைப் பொருட்கள் ஒழிப்புக்கு பாஜக என்ன தீர்வு சொல்லப் போகிறது என்று மக்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான தீர்வை நோக்கி பாஜக சென்று கொண்டிருக்கிறது. அதன்படி, இன்று முதல் (மார்ச் 13) முதல் 19-ம் தேதி வரை ஒருவாரம் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் தினமும் 2 மணி நேரம் வீதம் 15 மணி நேரம் போதை ஒழிப்புக்காக உழைக்க வேண்டும். உங்கள் வேலையை பார்த்துக் கொண்டே காலையில் 1 மணி நேரம், மாலையில் 1 மணி நேரம் சமுதாய நலனுக்காக உங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்புகள், பேருந்து நிலையம், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேச வேண்டும். மருத்துவர்களைக் கொண்டு ஆலோசனை முகாம் நடத்தலாம். மாணவர்கள், இளைஞர்களை போதை மறுவாழ்வு இல்லங்களுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ளவர்களின் நிலையை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வரும் 16-ம் தேதி காலை 11 மணிக்கு 50 ஆயிரம் பூத் தலைவர்கள், உறுப்பினர்கள் 50 பேர், 100 பேரை அழைத்து போதை ஒழிப்புக் கூட்டம் நடத்தவேண்டும். போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், தன்னார்வலர்கள் மற்றும் மக்களுடன் சேர்ந்து மிகப்பெரிய யுத்தம் நடத்த வேண்டும்.

ஆளும் கட்சியைக் கண்டித்து ஆண்ட கட்சியினர் கருப்புச் சட்டை அணிந்து போராடுகின்றனர். இது என்ன கபட நாடகம். உங்கள் ஆட்சியிலும் 5,500 மதுக்கடைகள் இருந்தன. பாஜக ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும். போதைப் பொருட்கள் மட்டுமல்ல, திராவிடக் கட்சிகளும் நமக்கு வேண்டாம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்