மதுரை எய்ம்ஸ் வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை நிர்ணயித்த காலத்துக்குள் கட்டி முடிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மதுரையுடன் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் மதுரையில் இன்னும் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை.

மதுரையில் 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை நிர்ணயித்த காலத்திற்குள் கட்டி முடிக்கவும், கட்டுமானப் பணியில் உண்மையை மறைத்து பொய் அறிக்கை வெளியிடும் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கவும், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிக்கான டெண்டர் முடிந்துள்ளது. 2026-ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். எய்ம்ஸ் கட்டுமானப்பணி குறித்த முழு விபரம் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து மத்திய நிதித்துறை செயலாளர், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவ கழக இயக்குனர், மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE