பாஜகவுடன் சமக இணைப்பு முதல் ஹரியாணா அரசியல் பரபரப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 12, 2024 

By செய்திப்பிரிவு

சமகவை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனர் சரத்குமார் செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இணைத்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சரத்குமார் பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இணைப்புக்குப் பின்னர் பேசிய சரத்குமார், “பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு, நாட்டின் வளர்ச்சிக்காகவும், வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், பிரதமர் மோடி காமராஜரைப் போல ஆட்சி செலுத்துவதாக புகழாரம் சூட்டினார்.

தமிழகத்தில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது: முதல்வர்: “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பாஜக அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும்.

எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிஏஏ சட்டத்துக்கு தமிழக தலைவர்கள் எதிர்ப்பு: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை அமித்ஷா வெளியிட்டுள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தேர்தலுக்காக பொதுமக்களை பிளவுபடுத்தி இறையாண்மையை சிதைக்க துடிக்கிறது என குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை வெளிபடுத்தியுள்ளார்.

“இந்திய நாட்டின் குடியுரிமை சட்டம் என்கிற சட்டத்தின் மூலம் மக்களைப் பிளவுபடுத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ தேமுதிக என்றைக்கும் ஏற்காது” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்புக்காகத்தான். மதத்துக்கு எதிரானதல்ல. இதில் மாநில அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. இது நாட்டின் திட்டம். மாநில அரசுகள் இதற்கு ஆதரவு தரவேண்டும்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதிமுக மனித சங்கிலி போராட்டம்:போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே, “எங்களை எப்படியாவது அவர்கள் பக்கம் இழுக்கலாம் என முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற வழக்கு தொடுக்க ஏவி விட்டவர்களின் எண்ணம் பலிக்காது” என்று இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் பாஜக மீது அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: “மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 2024, ஜனவரி 1 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 2024 ஜனவரி 1 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி ஐஜி தேன்மொழி, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேஜஸ் போர் விமானம் விபத்து @ ராஜஸ்தான்: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. மாணவர்கள் விடுதி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. நல்வாய்ப்பாக விமானி பத்திரமாக வெளியேறினார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹரியாணா அரசியலில் சலசலப்பு - நடப்பது என்ன?: ஹரியாணா முதல்வர் பதவியை மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவி ஏற்றார்.

முன்னதாக, ஹரியாணாவின் பாஜக பொறுப்பாளர் பிப்லாப் தேவ் மற்றும் மனோகர் லால் கட்டார் முன்னிலையில், நயாப் சிங் சைனி பாஜக சட்டப்பேரவைக் கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு கடந்த 2019-ல் நடந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை பெறத் தவறிய பாஜக 40 இடங்களைப் பெற்றிருந்தது. அதனால் 10 இடங்களைப் பெற்றிருந்த ஜெஜெபியுடன் இணைந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. தற்போது இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆளும் பாஜக - ஜனநாயக ஜனதா கட்சி இடையே பிளவு ஏற்படலாம் என்ற ஊகத்துக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை காலையில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது அமைச்சரவையுடன் ராஜினாமா செய்தார்.

என்றாலும், ஹரியாணா பேரவையில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை பாஜக உறுதிப்படுத்தியுள்ளது. தங்கள் எம்எல்ஏக்களுடன், செல்வாக்கு மிக்கத் தலைவர் கோபால் கந்தா உள்ளிட்ட 6 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இருப்பதாக உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

“இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து”: “குடியுரிமை திருத்தச் சட்டம் தார்மிக ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தவறானது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இண்டியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வந்தால், இந்தச் சட்டத்தை சந்தேகத்துக்கு இடமின்றி திரும்பப் பெறுவோம். இது எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இந்திய குடியுரிமைக்குள், நமது தேசிய வாழ்க்கைக்குள் மதத்தைப் புகுத்துவதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

10 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைப்பு: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை 10 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையும் அடங்கும். மேலும், பல்வேறு ரயில்வே சேவைகள் மற்றும் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE