“பிச்சை, ஓசி என திமுக நிர்வாகிகள் பேசியபோது கண்டிக்காதது ஏன்?” - குஷ்பு பதில் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: "பிச்சை, ஓசி பேருந்து என திமுக நிர்வாகிகள் கூறியபோது அக்கட்சியினர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?" என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

மகளிர் உரிமைத் தொகையை பிச்சை எனக் கூறியதற்கு குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், "1982-ல் மறைந்த முதல்வர் எம்ஜிஆரால், கொண்டுவரப்பட்ட சத்துணவுத் திட்டத்தை திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான முரசொலி மாறன் விமர்சித்திருந்தார். தமிழகத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தை முன்னாள் அமைச்சர் பொன்முடி ஓசி என விமர்சித்திருந்தார்.

‘உயர் நீதிமன்ற மதுரை கிளை, கருணாநிதி போட்ட பிச்சை’ என்று அமைச்சர் எ.வ.வேலு பேசியிருக்கிறார். இதுபோன்ற கருத்துகளை இவர்கள் பேசியபோது யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. அப்போது நீங்கள் எல்லாம், வாய்ப்பேச முடியாத காது கேட்காத பார்வையற்றவர்களாக இருந்தீர்களா?

தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தை தடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் மூலம் அரசு கமிஷன் பெறுவதை நிறுத்த வேண்டும். டாஸ்மாக்கில் செலவழிக்கும் பணத்தை சேமித்து கண்ணியமாக குடும்பம் நடத்த பெண்களுக்கு அரசு உதவ வேண்டும். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் தேவை இல்லை, பெண்களுக்கான சுதந்திரத்தை தாருங்கள். அடுத்த 14 தலைமுறைகளைக் காப்பாற்ற திமுகவினருக்குத்தான் பணம் தேவையாக இருக்கிறது” என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் நேற்று செங்குன்றம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் உள்ள தாய்மார்களு்ககு மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சைப் போடுவதால், அவர்களது வாக்குகளைப் பெற்றுவிடலாம் என திமுக நினைக்கிறது" என்று பேசினார். குஷ்புவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, குஷ்பு தனது கருத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE