கிருஷ்ணகிரி: “எங்களை எப்படியாவது அவர்கள் (பாஜக) பக்கம் இழுக்கலாம் என முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற வழக்கு தொடுக்க ஏவி விட்டவர்களின் எண்ணம் பலிக்காது” என்று இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழகம் போதைப் பொருள் கிடங்காக மாறியதை கண்டிப்பதாகக் கூறி கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில பங்கேற்ற அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகம் எளிதாக போதைப் பொருட்கள் கிடைக்கும் மாநிலமாக மாறி உள்ளது. கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அரசு வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பாக 2,438 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை. அவர்கள் திமுகவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், இல்லையென்றால் திமுகவினருக்கு வேண்டியவர்களாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே போதைப் பொருட்கள் இந்த அளவிற்கு பரவி உள்ளது. தமிழகத்தில் ஒரு துளி போதை பொருட்கள் இல்லாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், திமுக அரசு தாங்களாவே விலகிக் கொள்ள வேண்டும்.
மு.க.ஸ்டாலினுக்கு அச்சம்: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலை உள்ளதால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது. இதன் காரணமாகவே எல்லா குற்றச்சாட்டுகளையும் அதிமுக மீது சுமத்துகிறார். குறிப்பாக சிஏஏ சட்டம் வந்தவுடன், எடப்பாடி பழனிசாமி கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளார். மக்களை பிளவுப்படுத்த, இந்த அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்றார். ஆனால் சிஏஏ சட்டத்தை அதிமுக எம்பிக்கள் 13 பேர் ஆதரித்ததாக கூறுகின்றனர். அவர்கள் யார் என கூற வேண்டும்.
» முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் இலங்கை துணை தூதரகம் சென்றுவர ஏற்பாடு - தமிழக அரசு @ ஐகோர்ட்
» “மக்களை பிளவுபடுத்துவதை ஏற்க முடியாது” - சிஏஏ அமலுக்கு பிரேமலதா எதிர்ப்பு
பாஜக தலைமையிலான மத்திய அரசில் 5 ஆண்டு காலம் பல்வேறு துறைகளில் முக்கிய அமைச்சர் பதவியை வகித்தவர்கள் திமுகவினர். இதனால், மத்திய அரசையோ, அதிமுகவையோ விமர்சிக்க அவர்களுக்கு எவ்வித தார்மிக உரிமையும் இல்லை. சிஏஏ சட்டத்தை அமுல்படுத்து வதன் மூலம் எப்படியாவது 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என பாஜக செய்யக் கூடிய சந்தர்ப்பவாத அரசியல் இது. இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பு நல்ல பாடத்தைப் புகட்டும்.
நேர்மையான, லஞ்ச லாவண்யம் இல்லாத அப்பழுக்கற்றவர்கள் என கூறிக் கொள்ளும் பாஜக ஆட்சி ஏன் தேர்தல் பத்திரத்தை உடனடியாக வெளியிட தயங்குகிறது. வங்கி ஒரு மணி நேரத்தில் தேர்தல் பத்திரத்தை வழங்கக் கூடிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. இந்தச் சூழலில் ஜூன் மாதம் வரை அவகாசம் கேட்கிறார்கள் என்றால், அங்கு மிகப் பெரிய தவறு நடந்துள்ளது என்பது தான் யதார்த்தமான உண்மை.
வட மாநிலங்களில் சந்தர்ப்ப சூழ்நிலை: ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் மக்கள் வாக்களித்துவிடுவார்களா என குஷ்பு பேசி உள்ளது கண்டனத்திற்குரியது. கீழ் நிலையில் இருக்கின்ற மக்களை தூக்கி விடுவதற்காக கொண்டுவர கூடிய திட்டங்களை விமர்சிப்பது அவர்களுடைய அறியாமை காட்டுகிறது. வட மாநிலங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் பாஜக கட்சிக்கு வருவார்கள்.
மேற்கு வங்கத்தில் அவ்வாறு பாஜகவிற்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்த உடன் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸுக்கு சென்று விட்டனர். வட மாநிலத்தில் சந்தர்ப்பத்துக்கு அரசியல் செய்பவர்கள், உதாரணமாக சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவி கொடுக்கவில்லை என்பதால் யார் காலிலும் விழ மாட்டேன் என தெரிவித்தார். தற்பொழுது மக்களவையில் சீட் வழங்கியதும் பாஜகவுக்கு துதி பாடுகிறார். அதிமுகவில் இருப்பவர்களுக்கு கடைசி வரை பதவி கிடைக்கவில்லை என்றாலும் கொடி ஏந்தி மரணிப்பவர்கள் தான்” என்றார்.
நாங்கள் சுயமரியாதையுடன்.., - இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, “எங்களை எப்படியாவது அவர்கள் (பாஜக) பக்கம் இழுக்கலாம் என முயற்சி செய்கிறார்கள். நாங்கள் சுய மரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். நாங்கள் சுய மரியாதையுடன் நின்று கொண்டிருப்பதால் இதுபோன்ற வழக்குகள் யாரால் பதிவு செய்யப் படுகிறது என எங்களுக்குத் தெரியும். அதை முறையாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சின்னமும், சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச் செயலாளர் இருக்கக் கூடிய சூழலில் இதுபோன்ற வழக்கு தொடுக்க ஏவி விட்டவர்களின் எண்ணம் பலிக்காது” என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் தங்க முத்து, நகர செயலாளர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பழையப்பேட்டை வரை நடந்த மனித சங்கலி போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago