சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும் என மதிமுக பொதுச் செயலாளார் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் ,நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலும் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிற்போக்கு இந்துத்துவ பாசிச பாஜக அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றே ஜனநாயக சக்திகளின் இன்றியமையாத கடமையாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி தலைமையில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததும், காஷ்மீர் சிறப்பு உரிமைப் பறிப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மோசடியான தீர்ப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு. குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை சட்டப் பூர்வமாகவே இந்து ராஷ்டிரமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது .
1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் இந்திய நாட்டில் பிறந்த அனைவரும் இந்தியக் குடியுரிமை பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
பிரிவினையின்போதும், அதன் பின்னரும் குடிபெயர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதற்கும்கூட மதம் வரையறையாக வைக்கப்படவில்லை.
அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பவர்களை வெளியேற்றும் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, “இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்” எனக் குடியுரிமைச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டு, 1987-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
2004-ல் இந்த நிபந்தனை மேலும் கடுமையாக்கப்பட்டது. குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பதோடு, மற்றவர் சட்டவிரோதக் குடியேறியாக இருக்கக் கூடாது என அச்சட்டம் திருத்தப்பட்டது.
இந்தத் திருத்தம் இந்தியாவில் குடியேறியிருக்கும் வங்கதேச முஸ்லிம்களையும், அவர்களது வாரிசுகளையும் ஒதுக்கி, சட்டவிரோத ஊடுருவல் பேர்வழிகளாகக் காட்டும் உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது.
மோடியின் ஆட்சியில் தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத் திருத்தமோ, மிகவும் வெளிப்படையாகவே இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி, ஒதுக்குகிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து எவ்வித ஆவணங்களுமின்றி, டிசம்பர் 31, 2014 முன்பாக இந்தியாவில் குடியேறியிருக்கும் இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதக் கூடாது. மேலும், அவர்கள் மீது கடவுச்சீட்டுச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால், அவ்வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” எனக் குறிப்பிடுகிறது, அத்திருத்தம்.
பாகிஸ்தானில் இந்துக்களைவிட, அஹமதியா முஸ்லீம்கள்தான் கொடூரமான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் மதச் சிறுபான்மையினர். பர்மிய ராணுவம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இனப் படுகொலை நடத்தியிருப்பது உலகெங்கிலுமே அம்பலமாகியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் இனப் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர்.
இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுக் கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தம் யூதர்களுக்கு இசுரேல் போல, இந்துக்களுக்கு இந்தியா என்பதை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப, இச்சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகள், வரம்புகளை எதிர்காலத்தில் மாற்றும் அதிகாரத்தையும் மைய அரசிற்கு அளித்தே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்துக்கள் அல்லாதவர்கள், எந்தவொரு உரிமையினையும், சலுகையினையும் கோராமல், இந்து தேசத்துக்குக் கீழ்ப்படிந்து இந்த நாட்டில் வாழலாம்” என ஆர்.எஸ்.எஸ்.- சித்தாந்த குரு கோல்வால்கர் கூறியிருப்பதற்கு ஏற்ப, இந்து இந்தியாவை உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்.- இறுதி நோக்கம். அதனை நோக்கிச் செல்லும் திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அடுத்த அடிதான் குடியுரிமைத் திருத்தச் சட்டத் திருத்தம் ஆகும்.
மோடி ஆட்சியில் தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத் திருத்தமோ, மிகவும் வெளிப்படையாகவே இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி, ஒதுக்குகிறது.
2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா மக்களவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமானது.
மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாஜக அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகளால் தங்களது உரிமைகள் பறிபோகும் என வடகிழக்கு மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த கூடாது என்று திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு இஸ்லாமிய பெருமக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் தீவிரப் போராட்டத்தில் இறங்கினர். லட்சக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் தங்கள் எதிர்காலம் குறித்த கவலையோடு வீதியில் இறங்கி போராடினார்கள்.
இதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்துவதை ஒத்திவைத்த பாஜக அரசு மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளிவருகிற சூழலில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் ,நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலும் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிற்போக்கு இந்துத்துவ பாசிச பாஜக அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றே ஜனநாயக சக்திகளின் இன்றியமையாத கடமையாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago