“பாஜக, அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்” - சிஏஏ அமலுக்கு ஸ்டாலின் எதிர்வினை

By செய்திப்பிரிவு

சென்னை: "அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு குடியுரிமைத் திருத்தச் கொண்டு வந்த பாஜகவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள், தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது மத்திய பாஜக அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் சிஏஏ சட்டத்தை இயற்றியது மத்திய பாஜக அரசு.

அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால், பாஜகவின் பாதம் தாங்கியான அதிமுக ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பாஜக.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.

அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பாஜகவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள், தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE