தேனி தொகுதியை இஸ்லாமியருக்கு காங்கிரஸ் ஒதுக்கீடு செய்ய எழும் கோரிக்கை

By என்.சன்னாசி

மதுரை: காங்கிரஸுக்கு ஒதுக்கிய 9 தொகுதிகளில் தேனியை இஸ்லாமியருக்கு ஒதுக்கக் கோரி கட்சி தலைமைக்கு சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுக்குழு உறுப்பினரான மதுரை சையது பாபு உள்ளிட்ட அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் கடிதம் ஒன்றை (மெயில் மூலம்) அனுப்பியுள்ளனர்.

அதில், 'தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல், மக்களவை தேர்தல் மற்றும் உள்ளாட்சி போன்ற பல்வேறு அமைப்புகளிலும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவதில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். 1967-க்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றாலும், சிறுபான்மை பிரிவைச் சார்ந்தவர்களும், தலித் மக்களும் ஒன்றிணைந்து காங்கிரஸ் இயக்கம் வலுவாக இருக்கவேண்டும் என பணியாற்றுகிறோம்.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கிடையில் கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை, ஆரணி, தேனி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் அல்லது தென்காசி, கோவை அல்லது கடலூர் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என உத்தேசமாக தெரிகிறது. அப்படி தேர்வாகும் சூழலில் தேனி தொகுதியை இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என்று அதில் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE