சென்னை - மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்: பிரதமர் நாளை தொடங்குகிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே தற்போது 47 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும், சென்னை எழும்பூர் - நெல்லை, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், எப்போதும் இருக்கைகள் முழுமையாக நிரம்பிய நிலையிலேயே இந்த ரயில்கள் செல்கின்றன. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், இவை சிறப்பு ரயில்களாகவும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - கர்நாடக மாநிலம் மைசூரு இடையே கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை - மைசூரு இடையே பெங்களூரு வழியாக ஏற்கெனவே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதே தடத்தில் கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 12-ம் தேதி (நாளை) காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை - பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும். 5-ம் தேதியில் இருந்து மைசூரு வரை செல்லும்.

கொல்லம் - திருப்பதி புதிய ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். தவிர, திருவனந்தபுரம் - காசர்கோடு இடையிலான வந்தே பாரத் ரயில், மங்களூரு வரை நீட்டிக்கப்பட உள்ளது. 200-க்கும் மேற்பட்டரயில்வே மேம்பாலங்கள், ரயில் இன்ஜின் பராமரிப்புக்கான 40 பணிமனைகள், 50 மலிவு விலை மருந்தகங்கள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE