முதல்வர் வருகை: ஆபத்தான முறையில் கொடி நடும் பணியில் தொழிலாளர்கள் @ தருமபுரி

By எஸ்.ராஜா செல்லம்

நாளை (மார்ச் 11) காலை தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மூன்று மாவட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் மற்றும் புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தலுக்கான அரசு விழா நடைபெறுகிறது. இவ்விழாவின் நாயகராக, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையத்தை அடையும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கு செல்கிறார். அவரது வருகையையொட்டி 8-ம் தேதி முதல் பல்வேறு ஏற்பாடுகளில் அரசு இயந்திரமும், திமுக-வினரும் சுழன்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக முதல்வரை வரவேற்க வழிநெடுக கொடிகள், பேனர்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. காமலாபுரம் விமான நிலையம் முதல் தருமபுரி அரசு கலைக் கல்லூரி வரை சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சிறு இடைவெளி காணப்பட்டபோதும், சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் பகுதி, சாலையோரப் பகுதி ஆகிய இடங்களில் 10-ம் தேதி அதிகாலைக்குள்ளாகவே கட்சி ஏற்பாட்டில் திமுக கொடிகள் நடப்பட்டு பட்டொளி வீசிப் பறந்தன. ஆங்காங்கே பேனர்களும்.

கொடி நடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் ஆபத்தான பணியை கவனப்படுத்துவதான் இந்த செய்தியின் நோக்கம். இந்தக் கொடி நடும் பணியை, தனித்தனி குழுக்களாக பிரிந்து தொழிலாளர்கள் மேற்கொண்டனர். சில குழுவினர் 9-ம் தேதி பகலிலேயே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நடவு செய்து முடித்தனர்.

சில குழுவினர் 9-ம் தேதி நள்ளிரவில் தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொடிகளை நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஒரு குழு சேலம்-தருமபுரி மார்க்க சாலையின் இடது ஓரம் கொடிகளை நட்டனர்.

இந்தக் குழுவினரிடம் 2 வாகனங்கள் இருந்தன. ஒன்று, கம்ப்ரஷர் இயந்திரத்துடன் கூடிய டிராக்டர் வாகனம். மற்றொன்று, திமுக கொடிகள் கட்டப்பட்ட இரும்புக் குழாய்கள் ஏற்றப்பட்ட சிறிய சரக்கு வாகனம். டிராக்டர் வாகனத்தின் ஓட்டுநர் ஆமை வேகத்தில் வண்டியை இயக்கினார். அதில் இருந்த கம்பரஷர் இயந்திர உதவியுடன் சில தொழிலாளர்கள் டிராக்டரை பின் தொடர்ந்தபடி சாலையோர மண் பரப்பில் சீரான இடைவெளியில் துளையிட்டுக் கொண்டே சென்றனர்.

சரக்கு வாகனம் அவர்களை பின் தொடர, மற்றொரு குழுவினர் அந்தத் துளையில் கொடியுடன் கூடிய இரும்புக் குழாய்களை நட்டு சுற்றிலும் மண் பரப்பை இறுகச் செய்தபடி பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

மற்றொரு இடத்தில் பணியாற்றிய குழுவினரிடமும் 2 வாகனங்கள். இந்த வாகனங்கள் அதே மார்க்க சாலையில் சென்டர் மீடியனை ஒட்டியபடி செல்கின்றன. கொடிகள் பாரம் ஏற்றிய சிறிய சரக்கு வாகனம் முன்னால் ஊர்ந்து சென்றது. சென்டர் மீடியன் பகுதி மண் பரப்பில் 2 தொழிலாளர்கள் கடப்பாரை மூலம் துளையிட, மற்ற தொழிலாளர்கள் கொடிகள் கட்டப்பட்ட இரும்பு குழாய்களை நட்டனர்.

இவர்களுக்கு பின்னால் ஜீப் வகையைச் சேர்ந்த ஒரு வாகனம் ஊர்ந்து சென்றது. இந்த வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பின்புறம் கால்களை தொங்கவிட்டிருந்த இளைஞர் டார்ச் லைட் மூலம் சைகை செய்து பின்னால் வரும் வாகனங்களை ஒதுங்கிப் போகச் செய்தார்.

இரவு நேரங்களில் உள்ளூர் வாகனங்களின் இடையூறு இருக்காது என்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் கார்கள், சிறிய சரக்கு வாகனங்கள், லாரிகள், பேருந்துகள் ஆகியவை சீறிப்பாய்வதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு அதிவேகத்தில் விரையும் வாகனங்களின் ஓட்டுநர்கள், தேசிய நெடுஞ்சாலையில் கொடி நடவில் ஈடுபடும் தொழிலாளர்களை எதிர்பார்க்காததால் எதிர்கொள்ள முடியாமல் திணறி சுதாரித்துச் சென்றனர். கரணம் பிசகினால் பெரும் விபரீதம் நிகழ்ந்து விடும் என்பதை உணராமல் அந்த தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, கோவை ஆகிய இடங்களில் பேனர்கள் சரிந்து விழுந்து 2 உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து, வரவேற்பு பேனர்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள், கொடிகள் போன்றவற்றை அமைக்க உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

அதேபோல, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் ஸ்டாலினும் பேனர் வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்ததுடன், பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் திமுக-வினரிடம் அறிவுறுத்தினார்.

ஆனாலும்கூட ஆர்வ மிகுதியாலும், முதல்வர் மற்றும் தலைவர்கள் மீதான பிரியத்தாலும் சில இடங்களில் கட்சியினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், இதுபோன்ற செயல்களை முதல்வர் கண்டிப்பாக அனுமதிக்கவும், ஊக்கப்படுத்தவும் மாட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE