''அருண் கோயல் ராஜினாமா தேர்தல் நேர்மையாக நடக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது'' - திருமாவளவன் சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: "பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன. எனவே, உச்ச நீதிமன்றம் இதனை வேடிக்கை பார்க்க கூடாது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து அருண் கோயல் பதவி விலகியிருப்பது நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடக்குமா என்கிற அச்சத்தை எழுப்பி இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாகத் தலையிட்டுத் தேர்தலை நேர்மையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது தேர்தல் முறையாகும். சுமார் 140 கோடி மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும்.

அதற்கெனவே மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் இயங்கி வருகிறது. அது அரசமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த அமைப்பைத் தம்முடைய கைப் பாவையாக ஆக்கிக் கொள்வதற்கு மோடி அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அருண் கோயல் கடந்த 2022 நவம்பரில் விருப்ப ஓய்வு பெற்ற 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையராக மோடி அரசால் நியமிக்கப்பட்டார். அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த நேரத்தில் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கையும் அத்துடன் சேர்த்து விசாரித்தது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி கொண்ட அமைப்பாகத் தொடர வேண்டுமென்றால் தேர்தல் ஆணையர் நியமனம் நேர்மையாக நடைபெற வேண்டும் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்காக மூன்று பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய மூவரைக் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பை செல்லாததாக ஆக்கும் நோக்கில் மோடி அரசு, அவசர அவசரமாக சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதாவது, பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரைக் கொண்ட குழுவில் யாரேனும் இரண்டு பேர் என்ன முடிவெடுக்கிறார்களோ அதனடிப்படையில் தேர்தல் ஆணையர் நியமனம் நடைபெறும் என்று அந்த சட்டம் சொல்கிறது. இது ஆளுங்கட்சியின் கைப் பாவையாகத் தேர்தல் ஆணையத்தை மாற்றும் நடவடிக்கையே தவிர வேறல்ல.

இந்த சட்டத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் எதிர்த்தோம். அதையும் மீறி மோடி அரசால் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு வெளிப்படையாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்துத் தேர்தல் ஆணையத்தைத் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வர மோடி அரசாங்கம் திட்டமிட்டுச் செயல்படுகிறது. மோடி அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்தப் பின்னணியில் தான் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருக்கிறார். மூன்று உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் ஆணையத்தில் இப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே இருக்கிறார். இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக இருக்கின்றன. அவற்றைத் தனது விருப்பம் போல இப்போது மோடி அரசு நிரப்பப் போகிறது. அதன் மூலம் தேர்தல் ஆணையத்தை ஒட்டுமொத்தமாகத் தனது பிடிக்குள் கொண்டு வரப் போகிறது.

‘வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடத்தப்படுகின்றன. எனவே, நூறு விழுக்காடு ஒப்புகைச் சீட்டுடன் ( VVPAT) வாக்குப்பதிவு எந்திரங்களை இணைக்க வேண்டும்; ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்’ என்று ஏற்கனவே இண்டியா கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன. அதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

400 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் பேசி வருகிறார்கள். அதற்கு ஏற்ப அவர்களது ஆதரவு ஊடகங்களில் கருத்துக் கணிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும் போது வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி செய்து இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுவதற்கு பாஜக சதித் திட்டம் தீட்டி இருக்கிறதோ என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன. எனவே, உச்ச நீதிமன்றம் இதனை வேடிக்கை பார்க்க கூடாது. தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கையும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கையும் அவசர வழக்குகளாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும்.

இந்திய தலைமை நீதிபதியும் அங்கம் வகிக்கும் தேர்வுக்குழுவை நியமித்துக் காலியாகவுள்ள இரண்டு ஆணையர்களை நியமிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து 'அரசியல் தலையீடுகளின்றி தேர்தல் நடக்கும்' என்கிற நம்பிக்கையை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்