பாலியல் புகாரில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மாயம்?

By செய்திப்பிரிவு

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

2021-ல் தமிழக காவல் துறை சிறப்பு டிஜிபி-யாக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், புகார் கொடுக்க முயற்சித்தபோது அதனைசெங்கல்பட்டு எஸ்பி-யாகஇருந்த கண்ணன் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் குறித்துராஜேஷ் தாஸ், கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

3 ஆண்டுகள் சிறை: வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண் எஸ்.பி.யைமுறையாகப் புகார் அளிக்கவிடாமல் தடுத்து நிறுத்தியதற்காக, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் அப்போது கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டிலும் இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, எப்போது வேண்டுமானாலும் ராஜேஷ் தாஸ் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில் ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவரை கைது செய்வதற்காக சென்னை தையூர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸார் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை. இதையடுத்து அவர் தலைமறைவானது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டின் வாயில் காவலாளிகளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE