பாஜக தான் போட்டியிட வேண்டும்: தூத்துக்குடியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் தங்கள் தலைமையிலான கூட்டணியை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.

கூட்டணியில் எந்த கட்சிக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்ற விவாதம் தற்போது கட்சியினரி டையே அதிகமாக உள்ளது. பாஜக கூட்டணியில் சமக இணைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி அல்லது திருநெல் வேலி மக்களவை தொகுதி ஒதுக்கப்படும் என பரவலாக பேசப் படுகிறது. ஆனால், திருநெல்வேலி கிடைக்கவில்லை என்றால் விருதுநகர் தொகுதியில் போட்டி யிட சரத்குமார் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகிகள், தூத்துக்குடி தொகுதியில் பாஜக தான் போட்டியிட வேண்டும் என, கட்சியின் மேலிடத்தை கேட்டு வருகின்றனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடத்திய போது, தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதியான கோவில் பட்டி, விளாத்திகுளம் பகுதியில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. ”கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளில் மக்கள் பிரச்சினைக்காக அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய அரசு திட்டங்களில் மக்கள் பயன்பெற உதவி வருகிறோம். பிரதமரின் வீடு திட்டம், ஜல்ஜீவன் திட்டம் குறித்து களப்பிரச்சாரம் செய்து வருகிறோம்.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் `தாமரையை’ கொண்டு சேர்த்துள்ளோம். திராவிட கட்சிகளை கடந்து மக்கள் மனதில் பாஜக இடம் பெற்றுள்ளது. இதே நிலை தான் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தொகுதிகளிலும் உள்ளது. இண்டியா கூட்டணியில் திமுக சார்பில் தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து பாஜகவே களம் காண வேண்டும்” என, பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். பாஜக சார்பில் போட்டியிட ஏராளமானோர் விரும்பம் தெரிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கி விடாமல், பாஜகவே களமிறங்க வேண்டும் என, தலைமையிடமும் வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE