“இந்தியப் பொருளாதாரத்தை இரண்டே வரிகளில் சொல்லக் கூடியவர் மோடி தான்” - ப.சிதம்பரம் கிண்டல்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் மோடி ஏன் விலைவாசி உயர்வு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை பற்றி பேசுவதில்லை, இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று வேலையில்லா திண்டாட்டம் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. அரசு வெளியிடும் புள்ளி விவரங்களை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்கு முதல்வழி மத்திய அரசிலே இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதுதான்.

மத்திய அரசின் நிறுவனங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை மருத்துவமனைகள் என அனைத்திலும் 30 லட்சம் காலி இடங்கள் இருக்கின்றன. இவைகள் அனுமதிக்கப்பட்ட பதவிகள். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தால் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.

இரண்டாவதாக, அரசு நடத்தக்கூடிய தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவது என்பது வழக்கமாகிவிட்டது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் கடந்த 10, 15 நாட்களில் இரண்டு கேள்வி தாள்கள் கசிந்துள்ளனர். போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் வினாத்தாள் கசிந்தது. அடுத்தது ரிவியூ ஆபிசர் தேர்வின் வினாத்தாள் கசிந்தது. இவைகளை தடுக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் புதிய சட்டத்தை நிறைவேற்றுவோம். கேள்வித்தாள் கசிந்தால் அந்த குற்றவாளிகளை கண்டறிந்து, விரைவு நீதிமன்றங்களில் அவர்களுக்கு தண்டனையை பெற்று தருவோம்.

பாதிக்கப்பட்ட தேர்வு எழுதியவர்களுக்கும் இழப்பீடும் தருவோம். எதற்காக தேர்வை ரத்து செய்தார்கள். எத்தனை செலவு, எவ்வளவு அலைச்சல், எவ்வளவு துன்பம், எவ்வளவு மனச்சோர்வு அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கும். இதையெல்லாம் தடுக்க முடியும். ஸ்விகி, உபர் ஆகியவற்றில் பணிபுரிவர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் கிடையாது. இவர்களுக்காக ஒரு சட்டம் கொண்டு வரப்படும். மேலும் அவர்களுடைய வேலைகளை ஒழுங்குப்படுத்தி, இவர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பை ஏற்படுத்த சட்டம் இயற்றப்படும்.

பல இளைஞர்களுக்கு தொழில் தொடங்க எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் தொழில் தொடங்க முடியாமல் தவிக்கிறார்கள். அதற்கு காரணம் முதலீடு கிடையாது என்பதுதான். இந்த உலகத்தில் உள்ள மூன்று பெரிய நிறுவனங்கள் அனைத்தும் பெரிய கார் ஷெட்யில் தான் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு முதலீடு உதவி செய்ய வேண்டும். புதிய தொழில் தொடங்குவோருக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க உள்ளோம்.

அதில் ஒரு தொகுதிக்கு ரூ.10 கோடி வழங்கப்படும். தற்போது வங்கிக் கடன் மேட்டுக்குடி மக்களுக்குத்தான் செல்கிறது. சாதாரண மக்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. தேர்தல் நெருங்கும்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்துள்ளனர். தேர்தலுக்கு பின்னர் மீண்டும் விலையை உயர்த்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். பிரதமர் மோடி ஏன் விலைவாசி உயர்வு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை பற்றி பேசுவதில்லை.

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். 21,127 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதை யார் வாங்கினார்கள் என்பது பாரத ஸ்டேட் வங்கிக்கு தெரியும். அந்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்கின்றனர். உண்மையில் அவற்றை வெளியிட ஒரு நாள் போதும். மத்திய அரசு, மாநில அரசை வஞ்சிக்க கூடாது. எல்லா நிதியமைச்சர்களும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக கூறுகிறார்கள். இந்திய பொருளாதாரத்தை இரண்டு வரிகளில் சொல்லக்கூடிய ஒரே நபர் மோடி தான். நன்றாக இருக்கிறது என்று கூறி முடித்து விடுவார்.” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE