மதிமுகவுக்கு 1, விசிகவுக்கு 2 - திமுக கூட்டணியில் உடன்பாடு

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி, விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தானது. தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, கொமதேக, ஐயுஎம்எல், மநீம கட்சிகளுடன் தொகுதிகளை பங்கிட்டு வருகிறது.

இதில் கொமதேகவுக்கு நாமக்கல், ஐயுஎம்எல்-க்கு ராமநாதபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

மீதமுள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகளுடன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மதிமுக ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடங்களுடன் தங்களின் பம்பரம் சின்னத்தில் போட்டியிவும் விருப்பம் தெரிவித்தது.

விசிக 2 தனி மற்றும் ஒரு பொது தொகுதி மற்றும் தங்கள் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தது. திமுகவும் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பியதால், கூடுதல் இடம் என்பது சாத்தியமில்லை என்று தெரிவித்தது. இதனால், தொகுதி பங்கீடு இறுதியாவது இழுபறியானது. கடந்த சில தினங்களாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இரு கட்சிகளை அழைத்தும் அவர்கள் வரவில்லை.

இந்நிலையில், நேற்று காலை 10.30 மணிக்குசென்னை தலைமைச் செயலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற திருமாவளவன் அவரது கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழலில் பகல் 12.40 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தார். அவரைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, அவைத்தலைவர் அர்ஜூனராஜ் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வந்தனர். அவர்களை அடுத்து, விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வந்தனர்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை வைகோ சந்தித்து பேசிய நிலையில், இரு தரப்பினர் இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் கூறிய வைகோ, ‘‘நிரந்தரமாக திமுகவுக்கு பக்கபலமாக இருப்போம் என்று தெரிவித்துள்ளோம். நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

மாநிலங்களவை தொகுதியை பொறுத்தவரை கடந்த முறை ஒரு மாதத்தில் தேர்தல் வந்தது. இந்த முறை 15 மாதங்கள் இருப்பதால் அப்போது பேசுவோம்’’ என்றார். இதையடுத்து, பிற்பகல் 1.05 மணிக்கு விசிக தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், சட்டப்பேரவை கட்சித் தலைவர் சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோர் வந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிலையில், 2 தொகுதிகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "திமுக கூட்டணியில் சிதம்பரம் (தனி),விழுப்புரம் (தனி) தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். தமிழகம், தேசிய அளவிலான அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். எனவே பானை சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க கேட்டுள்ளோம். ஆணையம் இன்னும் பதிலளிக்கவில்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE