19 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 19 நாட்களாக நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில்2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனமான ஆசிரியர்களுக்கு வேறொருஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊதிய முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் தரக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு நடந்த தொடர் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்த கோரிக்கை தொடர்பாக குழு மைத்து 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதேநேரம் குழு அமைத்து 5 மாதங்களான பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் பிப்.19 முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்கள், சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செல்போனில் தொடர்புகொண்டுபேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை வாபஸ்பெறுவதாக இடைநிலை ஆசிரியர் கள் அறிவித்தனர்.

இதுகுறித்து எஸ்எஸ்டிஏ பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட்கூறும்போது, ‘‘பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது. தேர்தல் முடிந்ததும் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதேபோல், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தர இருப்பதாகவும், அதில் எங்களின் கோரிக்கையும் இருக்கும் எனக் கூறினர். அதையேற்று போராட்டத்தை தற்காலிக மாக வாபஸ் பெறுகிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE