திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக ஒரு தொகுதி கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசிய நிலையில், 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிட்ட நிலையில் மீண்டும் இதே தொகுதிகள் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக உடன்பாடு தெரிவித்துள்ளது.” என்று தெரிவித்தார்.
இதனிடையே, வரும் 2024 மக்களவை தேர்தலில் திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
» எல்லைக்கு உட்படாத வேறு நீதிமன்றங்களில் சரணடைவது செல்லாது: கொலை வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
» “சமத்துவக் கொள்கையை பின்பற்றி...” - விஜய் வெளியிட்ட வீடியோ
புதுச்சேரியில் பந்த்: போராட்டக்காரர்களுடன் போலீஸ் தள்ளுமுள்ளு: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி புதுசேரியில் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதால் பஸ், டெம்போ ஓடவில்லை. பொதுத்தேர்வு எழுதுவோர் பாதிக்காமல் இருக்க பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரியில் இருந்து சென்னை, காரைக்கால் என வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழக பஸ்கள் எல்லைப் பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகள் அங்கேயே இறக்கி விடப்பட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், “போராட்டம் மிக முக்கியமானது. ஆதரவு தெரிவிக்கிறோம். நிறுவனங்கள், கல்லூரிகள் விடுமுறை விடாததால் பணிக்குச் செல்ல சூழல் ஏற்பட்டு சிரமம் அடைந்தோம்” என்றனர்.
இதனிடையே, பந்த் போராட்டத்தில் இண்டியா கூட்டணி கட்சியினர் ஊர்லமாக சென்றபோது போலீஸாரின் தடுப்புகளைத் தாண்டி ஆளுநர் மாளிகை வரை முற்றுகையிடச் சென்றதால் அப்பகுதி முழுக்க போர்க்களமானது. இதில் காங்கிரஸ் எம்பி, 5 எம்எல்ஏக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர். சிலர் இந்தப் போராட்டத்தில் காயம் அடைந்தனர்.
மார்ச் 12-ல் அதிமுக மனித சங்கிலிப் போராட்டம்: “போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகம் தலைகுனிந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்ற வகையில், அதிமுக சார்பில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், மார்ச் 12-ம் தேதி, காலை 10 மணியளவில், மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெறும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதனிடையே “ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முழு விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதியை வைத்து சம்பிரதாயத்துக்கு ஓர் அறிக்கையைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
ராஜஸ்தானில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் காயம்: ராஜஸ்தானின் கோட்டா நகரில் மகா சிவராத்திரி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி 14 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில அமைச்சர் ஹீராலால் நகர் தெரிவித்துள்ளார்.
முருகன் பாஸ்போர்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவுடன் மறைமுகப் பேச்சு இல்லை: பிரேமலதா: “தமிழகத்தில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதன் அடிப்படையில், தேமுதிகவுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எங்களது உரிமையை நாங்கள் அதிமுகவிடம் கேட்டிருக்கிறோம்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும், பாஜகவுடன் திரைமறைவாக பேச்சுவார்த்தை ஒன்றும் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: “மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பல லட்சம் குடும்பங்களின் நிதிச் சுமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கும். குறிப்பாக பெண் சக்திக்கு வலிமை தரும். பெண்களுக்கு வலிமை சேர்ப்போம் என்ற எங்களின் வாக்குறுதிக்கு இணங்கவும், அவர்களின் வாழ்தலை எளிதாக்குவதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே "தான் எதிர்கட்சியாக இருந்தபோது சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக வீதி தோறும் போராடிய பாஜக, 9 ஆண்டு காலம் மக்கள் போராடிய போதும் செவி சாய்க்காமல் இருந்துவிட்டு தற்போது ரூ.100-குறைத்துவிட்டதாக பம்மாத்து செய்வதிலிருந்தே இது வெறும் தேர்தல் கபட நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனம்: இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்துள்ளார். இது பெண் சக்திக்கான சிறந்த சான்று என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பினைச் செய்த 12 பேரை மாநிலங்களவை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
வலுவான நிலையில் இந்திய அணி!: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார். நடப்பு தொடரில் ரோகித்தின் இரண்டாவது சதம் இது. இந்திய அணி தரப்பில் ஷுப்மன் கில்லும் சதம் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
கனடா கத்திக்குத்து சம்பவம்: இலங்கையைச் சேர்ந்த 6 பேர் பலி: கனடாவின் ஒட்டாவா நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இலங்கைப் பிரஜைகள் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கனடா பிரதமர் ட்ரூடோ, இந்த பயங்கரமான வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago