புதுச்சேரி பந்த் | இண்டியா கூட்டணியினர் - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு: பலர் கைது

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பந்த் போராட்டத்தில் இண்டியா கூட்டணி கட்சியினர் ஊர்லமாக சென்றபோது போலீஸாரின் தடுப்புகளைத் தாண்டி ஆளுநர் மாளிகை வரை முற்றுகையிடச் சென்றதால் அப்பகுதி முழுக்க போர்க்களமானது. இதில் காங்கிரஸ் எம்பி, 5 எம்எல்ஏக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர். சிலர் இந்தப் போராட்டத்தில் காயம் அடைந்தனர்.

புதுவையில் 9 வயது சிறுமி கொலைக்கு காரணமான போதைப்பொருளை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் இன்று நடக்கிறது. பந்த் போராட்டம் அறிவித்த இண்டியா கூட்டணி கட்சியினர் காலை 10 மணியளவில் காமராஜர் சிலை சந்திப்பில் திரண்டனர். அங்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பினர். சிலர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளைச் சேர்ந்த திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், திமுக எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஊர்வலம் நேரு வீதியில் சென்றது. ஊர்வலத்தை நேரு வீதி - மிஷன்வீதி சந்திப்பில் தடுப்புகள் அமைத்து போலீஸார் தடுத்தனர். இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் மிஷன் வீதியில் திரும்பினர். அவர்களை போலீஸார் தடுக்க முயன்றனர். அவர்களை தள்ளிவிட்டு, ஊர்வலத்தில் வந்தவர்கள் ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். அங்கு தடுப்புகளை அமைத்திருந்தாலும் பாதுகாப்பு பணியில் போலீஸார் போதியளவில் இல்லை.

இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த தடுப்புகளைத் தள்ளிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், திருநங்கைகள் சிலர் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் நோக்கி சென்றனர். அவர்களை போலீஸார் துரத்தி பாரதிதாசன் சிலை அருகே பிடித்தனர். பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை ராஜ்நிவாஸ் நோக்கி செல்லவிடாமல் தடுக்கும் வகையில் சுற்றி வளைத்தனர்.

திடீரென மீண்டும் அங்கிருந்து ராஜ்நிவாஸ் நோக்கி ஓடினர். சிலர் ஆளுநர் மாளிகை வாசலில் இருந்த தடுப்புகளைத் தாண்டி ஆளுநர் மாளிகை வாசலுக்கு சென்று கோஷம் எழுப்பினர். போலீஸார் அவர்களை துரத்திச் சென்று கைது செய்தனர். ஆளுநர் மாளிகை பகுதியெங்கும் போலீஸார் வந்தனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இண்டியா கூட்டணி கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சித் தலைவர் சிவா, திமுக, காங்கிரஸைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு கோரிமேடு அழைத்து செல்லப்பட்டனர். போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் 3 திருநங்கைககளுக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்