ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் போதிய இட வசதி இல்லாததால் பத்திரப் பதிவுக்கு வரும் மக்கள் அவதி

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: போதிய இடவசதியில்லாததால், ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்குப் பத்திரப் பதிவுக்கு வரும் மக்கள் நீண்ட நேரம் கால் கடுக்க நிற்கும் நிலையுள்ளது. இதைத் தடுக்க ஓசூர், பாகலூர் என இரண்டாகப் பிரித்து அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில் நகரான ஓசூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. இங்கு பெரிய மலர் சந்தையும் உள்ளது. ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஓசூர் நகரத்தையொட்டிய பகுதியில் வீட்டுமனைகள் வாங்க ஆர்வம் காட்டு வருகின்றனர்.

மேலும், சிறு, குறு தொழிற்சாலைகள் அமைக்க வரும் வெளி மாநில தொழில்முனைவோர் ஓசூர் நகரப்பகுதியில் நிலங்களை வாங்கி வருகின்றனர். இதனால், நிலங்களை வாங்கவும், விற்பனை செய்ய வும் ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.ஆனால், சார் பதிவாளர் அலுவலகம் மிகவும் பழமையான கட்டிடத்தில்,குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால், இட நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதேபோல, வாகனங்கள் நிறுத்தவும் போதிய இடவசதி யில்லாததால், சாலையோரத்தில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதால், சார்பதிவாளர் அலுவலக சாலை வாகன நெரிசலில் திணறும் நிலையுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தினசரி 200 பத்திரப்பதிவுகள் நடக்கின்றன. இதன் மூலம் அரசுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இங்கு பத்திரப் பதிவு செய்ய தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், அலுவலக கட்டிடம் போதிய இடவசதியின்றியும், இருக்கை, கழிப்பிட வசதியின்றி உள்ளது.

இதனால், பத்திரப்பதிவுக்கு வரும் பெரியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதில், பல நேரங்களில் சர்வர் பிரச்சினையால் பல மணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலையுள்ளது. அரசுக்கு அதிக வருவாயைப் பெற்றுத்தரும் சார் பதிவாளர் அலுவலகத்தை ஓசூர், பாகலூர் என இரண்டாகப் பிரித்து அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE