ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த குழந்தை உயிர் பிழைத்தது

மாம்பலம் புறநகர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த குழந்தை உயிர் பிழைத்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் தேவா. இவர் தனது மனைவி கார்த்திகா (30), குழந்தை காவ்யா(3) ஆகியோருடன் துணி வாங்க செவ்வாய்க்கிழமை தி.நகர் வந்தார். பின்னர் தாம்பரம் செல்வதற்காக அவர்கள் மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வந்தனர். ரயில் வந்தவுடன் கார்த்திகா ஒரு கையில் துணிப் பையையும், மற்றொரு கையில் காவ்யாவை இடுப்பில் வைத்து பிடித்துக் கொண்டும் ரயில் பெட்டி யில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் கணவர் தேவாவால் ரயிலில் ஏற முடியவில்லை.

சில விநாடிகளில் ரயில் புறப்பட, கணவர் ஏறவில்லை என்பதை அறித்த கார்த்திகா குழந்தையுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது பெட்டியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி கார்த்திகாவை தடுக்க, அதையும் மீறி ரயிலில் இருந்து குதித்துவிட்டார் கார்த்திகா. அப்போது கையில் இருந்த குழந்தை ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் இருந்த இடைவெளி வழியாக தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் அனைவரும் கூச்சல்போட ரயில் நிறுத்தப்பட்டது.

பிளாட்பாரத்தில் கார்த்திகாவும், தண்டவாளத்தில் குழந்தை காவ்யாவும் கீழே விழுந்து கிடக்க பயணிகள் அனைவரும் பரபரப்புடன் ஓடிவந்தனர். தண்டவாளத்தில் விழுந்த குழந்தை என்ன ஆனது? என்று அனைவரும் பார்த்த நிலையில் காவ்யாவின் அழுகுரல் கேட்க, குழந்தை உயிருடன்தான் இருக்கிறது என்று பலர் நிம்மதி அடைந்தனர்.

ஒரு இளைஞர் ரயில் பெட்டிகளுக்கு இடையே இறங்கி குழந்தை காவ்யாவை மீட்டு வெளியே கொண்டுவந்தார். குழந்தையின் கை விரல்களிலும், காலிலும் பலமான காயங்கள் இருந்தன. பிளாட்பாரத்தில் விழுந்த கார்த்திகாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனே இருவரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE