திமுகவில் விருப்ப மனு அளித்தோரிடம் மார்ச் 10-ல் நேர்காணல்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்துள்ளவர்களிடம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 10-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நேர்காணல் நடத்துவார். அப்போது வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்கள், பரிந்துரையாளர்களை அழைத்து வரக்கூடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்துக்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராயந்து அறிந்திட இருக்கிறார்.

இந்நேர்காணலின்போது, அந்தந்த மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும் அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE