“தமிழகத்தை வஞ்சிக்காத மத்திய அரசு அமைந்தால் இன்னும் நிறைய செய்ய முடியும்” - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய பல திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து கொண்டிருந்தாலும், மத்திய அரசின் ஒத்துழைப்போ, நிதி உதவியோ இல்லாமல்தான் நாம் செய்து கொண்டு வருகிறோம். தமிழகத்தை வஞ்சிக்காத மாநிலங்களை மதிக்கின்ற மத்திய அரசு அமைந்தால் இன்னும் நிறைய செய்ய முடியும். அதற்கான காலம் கனிந்து கொண்டு இருக்கிறது. அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும் தேவை" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 7) கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசியது: "என் மனதுக்கு நெருக்கமாக விளங்கும் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அடித்தளமாக அமைந்ததே இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமிதான். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த அகாடமியை நாம் தொடங்கினோம். இதுவரைக்கும் பத்து பேட்ச் பெண்கள், ஆறு பேட்ச் ஆண்கள் இங்கே பயிற்சி முடித்து, வேலைகளுக்குப் போயிருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு என்றால், 816 பெண்கள் - 444 ஆண்கள் என்று மொத்தம் 1260 பேர் இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியால் நல்ல வேலைகளுக்குப் போயிருக்கிறார்கள்.

இப்போது பெண்களுக்கான பதினொன்றாவது பேட்சில் 78 மாணவிகளும் – ஆண்களுக்கான ஏழாவது பேட்சில் 49 மாணவர்களும் – டெய்லரிங் ஏழாவது பேட்சில் 355 மகளிரும் என்று மொத்தம் 482 பேர் பயிற்சி முடித்திருக்கிறார்கள்.அடுத்து, பெண்களுக்கான பன்னிரண்டாவது பேட்சில் 80 மாணவிகளும் – ஆண்களுக்கான எட்டாவது பேட்சில் 50 மாணவர்களும், டெய்லரிங் எட்டாவது பேட்சில் 360 பெண்களும் பயிற்சி பெற இருக்கிறார்கள். இப்படி உங்களுக்கான மடிக்கணினியும், சான்றிதழும் வழங்க மட்டும் இன்றைக்கு நான் வரவில்லை.

பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்குதான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இதற்குப் பிறகும், திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறேன். இப்படி பார்த்து, பார்த்து, அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துகின்ற திட்டங்களை நிறைவேற்றி, நம்முடைய கொளத்தூர் தொகுதியை மற்ற தொகுதிகளுக்கெல்லாம், அதாவது இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இதை ஒரு மாடல் தொகுதியாக நினைத்துக் கொண்டு நீங்கள் செய்து காட்டவேண்டும் என்பதற்காக தான் அவர்களை எல்லாம் நான் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.

அதேபோல, மறைந்த முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கண் சிகிச்சை மையம் மூலமாக 750 பேருக்கு கண்ணாடி வழங்குவது, 250 மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத் தொகை வழங்குவது என்று ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் வந்திருக்கிறேன். இவையெல்லாம் கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், திமுகவின் சார்பில் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் இங்கே வருகிறபோது, அருமை தங்கை அனிதாவின் தியாகத்தைப் பற்றி நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஏனென்றால், ஒடுக்கப்பட்ட சமுதாயங்களில் இருந்து முன்னேறி வருகின்ற நம்மை போன்றவர்களுக்கு சமூகத்தில் ஏகப்பட்ட தடைகள் பல வரும். அந்த தடைகளை நியாயப்படுத்தவும் பல பேர் இருப்பார்கள். படித்து முன்னேற ஆசைப்பட்டதே தவறு என்பது போலவும், சிலர் புலம்பிக் கொண்டு இருப்பார்கள், பேசிக் கொண்டு இருப்பார்கள். இதையெல்லாம் கடந்துதான் நாம் முன்னேறியாக வேண்டும்.

நாளை மார்ச் 8 மகளிர் நாள். முதலில் உங்களுக்கெல்லாம் என்னுடைய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கும் ஆதரவாக இருப்பவர்கள் பெண்கள், நீங்கள் தான். அப்படிப்பட்ட பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய ஊக்கம் அளிக்கின்ற நாள். அதைத்தான் மகளிர் நாளாக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அந்த நாளுக்கு முன்னாடி இத்தனை சகோதரிகள் இங்கே பயனடைவதை பார்க்கின்றபோது உள்ளபடியே எனக்கு பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசு என்பது மகளிர் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி, பல சாதனைகளை தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கிறது. நேரத்தின் அருமை கருதி ஒருசில முத்தாய்ப்பான திட்டங்களை மட்டும் இங்கே நான் பட்டியலிட விரும்புகிறேன்.விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தோழி விடுதி இப்படி ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

இந்த திட்டங்களால் நீங்களும், தமிழகமும் முன்னேற்றம் அடைவதுதான் திராவிட மாடல் அரசுக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் பெருமை. இப்படி தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய பல திட்டங்களை நாம் எவ்வளவோ செய்து கொண்டிருந்தாலும், ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்போ, நிதி உதவியோ இல்லாமல்தான் நாம் செய்து கொண்டு வருகிறோம்.

தமிழகத்தை வஞ்சிக்காத மாநிலங்களை மதிக்கின்ற மத்திய அரசு அமைந்தால் இன்னும் நிறைய செய்ய முடியும். அதற்கான காலம் கனிந்து கொண்டு இருக்கிறது. அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும் தேவை; தயாராகிவிட்டீர்களா?

திராவிட மாடல் அரசின் திட்டங்களை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற விடியலின் ஒளியை இந்தியா முழுவதும் பரவிட வேண்டும் என்றால், வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் நீங்கள் அனைவரும் நல்ல முடிவெடுக்க வேண்டும்.

அதுவும் கொளத்தூர் தொகுதியில் நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இது கொளத்தூர் தொகுதி. என்னுடைய சட்டமன்ற தொகுதி, மன்னிக்க வேண்டும் நம்முடைய சட்டமன்ற தொகுதி. அப்படிப்பட்ட தொகுதியில் உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் மகளிர் அத்தனை பேருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து நிறைவு செய்கிறேன், என்று முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்