மக்களவைத் தேர்தலில் பம்பரம் (அ) தனிச் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கீடு செய்ய திமுக பேச்சுவார்த்தைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் பம்பரம் அல்லது தனிச் சின்னத்தில் போட்டியிட மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நீடித்த இழுபறி: திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்து மதிமுக, வரும் மக்களவைத் தேர்தலில் இரண்டு மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடங்களைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வலியுறுத்தி வந்தது. ஆனால், திமுக பேச்சுவார்த்தைக் குழு இதற்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இருதரப்புக்கும் இடையே நடந்த மூன்றுகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் முடிவு எட்டப்படவில்லை.

அவசரக் கூட்டம்: இந்நிலையில், மதிமுக நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 7) காலை 10 மணிக்கு ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில், ‘இண்டியா கூட்டணி’ 18-ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் திமுக தலைமையில் இயங்கி வரும் ‘இண்டியா கூட்டணி’ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக இருக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1+1 ஒதுக்கீடு: இந்நிலையில், திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு, மதிமுகவுக்கு ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவை இடத்தைப் பொறுத்தவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். அந்த பதவிக்காலம், 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, அந்த மாநிலங்களவை இடத்தை மீண்டும் மதிமுகவுக்கு அளிக்க திமுக ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி அல்லது விருதுநகர்: மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தையின்போது, மதிமுகவுக்கு திருச்சி மற்றும் விருதுநகர் தொகுதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த இரண்டு தொகுதிகளிலும் கட்சின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். எனவே, இந்தமுறை மதிமுக சார்பில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தனிச் சின்னம்: இந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில், திமுக கூட்டணியில் இந்தமுறை ஒதுக்கப்படும் தொகுதியில் மதிமுக தங்களது கட்சியின் சின்னமான பம்பரம் அல்லது ஏதாவது ஒரு தனிச் சின்த்தில் இந்த முறை போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் இதுகுறித்து மதிமுக தரப்பில் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதிமுக 2006-ம் ஆண்டு மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இழந்தது. அக்கட்சி அங்கீகாரத்தை மீட்கவும் தங்களது சின்னத்தை நிலைநிறுத்தவும் போராடி வருகிறது. அதற்குத்தான் தொகுதி எண்ணிகைகளை அதிகரிக்கவும், தனித்த சின்னத்தில் நின்று வாக்கு வங்கியை உறுதி செய்யவும் மதிமுக திட்டமிட்டிருந்தது கவனிக்கத்தக்கது. விரிவான தெளிவுப் பார்வை இங்கே...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE