புதுச்சேரி பந்த்: அரசு ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ விடுத்த அழைப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி பந்த் போராட்டத்தில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேருவும் அழைப்பு விடுத்துள்ளார். புதுச்சேரியில் போதைப்பொருளை கட்டுப்படுத்தவும், சிறுமி கொலை சம்பவத்தில் அரசின் அலட்சியத்தைக் கண்டித்தும் இண்டியா கூட்டணி, அதிமுக கட்சிகள் நாளை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்எல்ஏவான நேரு (உருளையன்பேட்டை தொகுதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது 5-வது படிக்கும் சிறுமிக்கு நடந்த கொடுஞ்செயல் இனி எந்த மாநிலத்திலும் நடக்கக் கூடாது. இது புதுவை மாநிலத்துக்கே அவமானகரமான நிகழ்வு. இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் உள்ள பெற்றோர்களையும் பாதிக்கும் சம்பவமாக பார்க்க வேண்டும்.

இவை போதைப்பொருள் கலாச்சார சீரழிவால் ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளைப் பெற்ற அனைத்துப் பெற்றோர்களும் பீதியடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் போதை கலாச்சாரத்தை இரும்புகரம் கொண்டு தடுத்து அடக்க வேண்டும். கொடுஞ்செயல் குற்றவாளிகளுக்கு துரித விசாரணை நடத்தி, அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும்.

பொதுமக்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும், மகளிர் மற்றும் பெண்குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாகவும் பொதுநல அமைப்புகள் மற்றும் மனித நேய மக்கள் சேவை இயக்கம் சார்பில் நாளை பந்த் கடைபிடிக்கப்படுகிறது. பொதுதேர்வு காலம் என்பதால் பள்ளிக்கு செல்லும் வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகன போக்குவரத்தை நிறுத்தியும், வணிக நிறுவனங்கள் நாளை கடைகளை மூடியும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பொது நல அமைப்புகளும் இந்த பந்த் போரட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், பொதுநல அமைப்பு நிர்வாகிகள் காமராஜர் சிலை அருகில் ஒன்று கூடி நேரு வீதியில் பேரணியாக சென்று கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாகவும் அறிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE