சென்னை: மதிமுக நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் இன்று (மார்ச் 7) காலை 10 மணிக்கு ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1: இந்திய நாட்டைச் சூழ்ந்திருக்கின்ற பாசிச இருளைப் போக்கி, ஜனநாயக வெளிச்சத்தை பாய்ச்சுவதற்கு இமயம் முதல் குமரி வரை ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை இருக்கிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் பாஜக தலைமையிலான அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றியே ஆக வேண்டும்.
இந்த நோக்கத்தோடு தேசிய மற்றும் மாநில கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள ‘இண்டியா கூட்டணி’ 18 ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இயங்கி வரும் ‘இண்டியா கூட்டணி’ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது.
தீர்மானம் 2: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மறுமலர்ச்சி திமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது.
» கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டத்தை உடனே கைவிட மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
» “தகுதியை தக்க வைக்கவே எங்கள் சின்னத்தில் போட்டி” - வைகோ விளக்கம்
இறுதியாக உச்ச நீதிமன்றத்தில், நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தார்.
2019 பிப்ரவரி 18 அன்று உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் செல்லுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18ஆம் தேதி மாண்பமை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு 29.02.2024 அன்று ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாகக் கையாண்டதாக பாராட்டுத் தெரிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்ச நீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். தனது அயராத போராட்டத்தாலும், நீதிமன்றத்தில் நீதிக்காக நடத்திய பெரும் போராட்டத்தாலும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடச் செய்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. நிர்வாகக் குழு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.
தீர்மானம் 3: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் கடந்த 2003இல் இருந்து 500 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிறது. இந்த அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான (attaining criticality) எரிபொருள் நிரப்பும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 4ஆம் தேதி துவக்கி வைத்தார்.
ஆனால், இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், ஈனுலை அமைத்து வரும் பாவினி நிர்வாகத்திடமிருந்தும் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகவும், ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதால் உலக நாடுகளே இந்த ஈனுலைகளைக் கைவிட்டு விட்டன.
2004 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2010ஆம் ஆண்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இதன் தொழில்நுட்பமானது உலக நாடுகள் பலவும் பயன்படுத்தி கைகூடாத காரணத்தால் கைவிடப்பட்டு விட்டவையாகும். இதன் காரணமாக இத்திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில், இப்போது 2024 டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. தாமதமானதால் இத்திட்டத்திற்கான செலவு ரூ. 3490 கோடியில் இருந்து இரண்டு மடங்கு அதிகரித்து மார்ச் 2023 கணக்கின்படி ரூ. 7700 கோடியாக உயர்ந்துள்ளதாக WNISR அறிக்கை கூறுகிறது.
பன்னாட்டு அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஈனுலைகளுக்குக் கிடையாது என்பதால், இந்த உலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகமும் எழுகிறது.
கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை அங்கேயே வைக்க மாட்டோம் என மத்திய அரசு தொடக்கத்தில் கூறி வந்தது. ஆனால், தற்போது அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளை மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து அணுஉலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டுக்கு வெள்ள பாதிப்பிற்கு நிதி கொடுங்கள், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் தாருங்கள் என கோரிக்கை வைத்தால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய பாஜக அரசு, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், அணுஉலை, ஈனுலை என தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானத் திட்டங்களையே திணிக்க நினைக்கிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே மத்திய பாஜக அரசு உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழக அரசு முனைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4: புதுச்சேரி முத்தயால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 9 வயது மகளான ஐந்தாம் வகுப்பு மாணவி அங்குள்ள கொடியவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலையும் செய்யப்பட்டுள்ளார். சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி - கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுமியின் சடலத்தை காவல்துறை எடுத்து உடல்கூறு ஆய்வு செய்தது.
இந்தப் படுகொலையைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. சட்டக் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி மாநிலமே கொந்தளிப்பாக உள்ள சூழலில், அந்த மாநில அரசு விரைந்து செயல்பட்டு பாலியல் வன்முறையிலும், படுகொலையிலும் ஈடுபட்ட கொடியவர்களை கடுமையாக தண்டிக்குமாறும் புதுவை வாழ் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது.
தொகுதிப் பங்கீட்டு இழுபறி நீடிப்பு: முன்னதாக, திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவினரோடு 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. 2 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்ட நிலையில், கடந்த முறை வழங்கியதுபோல் 1 மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையாவது வழங்க வேண்டும் என மதிமுக கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால், திமுக தரப்பிலோ ஒரு மக்களவைத் தொகுதி வழங்குவது எனவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதனால் உடன்படிக்கை கையெழுத்தாகாத நிலையில், இன்று மதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தியது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago