உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தயார்: டெல்லிக்கு பறந்த தமிழக பாஜக தலைவர்கள்

By செய்திப்பிரிவு

பாஜகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை தேசிய தலைமையிடம் வழங்குவதற்காக தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் தேர்தல் பணிக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாஜக தேசிய தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன், விஜயதரணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் தேர்வு தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தயார் செய்த உத்தேச வேட்பாளர் பட்டியல் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வேட்பாளர் பட்டியலை டெல்லி தலைமையிடம் ஒப்படைக்க அண்ணாமலை, எல்,முருகன் உள்ளிட்டோர் டெல்லி செல்கின்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைப்பு பொதுச் செயலாளர் உள்ளிட்டோரை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையில் சென்று இன்று சந்திக்க இருக்கிறோம்.

இந்த சந்திப்பில், தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் பேச இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பாஜக சார்பில் யார் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என்று தொண்டர்கள், கட்சியினர் விரும்பும் பட்டியலை டெல்லி தலைமையிடம் வழங்க இருக்கிறோம்.

39 தொகுதிகளுக்கும் பாஜக தலைவர்கள் சென்று கருத்து கேட்டிருக்கின்றனர். இதில் ஒரு தொகுதியில் மட்டும் தொண்டர்கள் 63 பெயரை கொடுத்துள்ளனர். அதேபோல், காஞ்சிபுரத்தில் 43 பெயர், மத்திய சென்னையில் 34 பெயர்கள், சேலத்தில் 54 பெயர்கள் என இந்த தொகுதிகளில் அதிகமாக வேட்பாளர்களின் பெயர்களை தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE