நயினார் நாகேந்திரன் Vs சரத்குமார் - நெல்லை தொகுதியின் அரசியல் கணக்கு என்ன?

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதால் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவது நயினார் நாகேந்திரனா, சரத்குமாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாகியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பிரதான கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. சமத்துவ மக்கள் கட்சியுடன் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் பேசி வருவதாக கடந்த சில நாட்களுக்குமுன் திருநெல்வேலியில் சரத்குமார் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக பாளையங்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பிரம்மாண்ட பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டிருந்ததால் அக்கட்சியினர் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது.

இந்நிலையில், பாஜவுடன் சமத்துவ மக்கள் கட்சி தேர்தல் கூட்டணி உடன்பாடு செய்துள்ளதாக சரத்குமார் இன்று அறிவித்தார். கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும், எந்த தொகுதியில் சரத்குமார் போட்டியிடுவார் என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெளிவாகிவிடும். சரத்குமார் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியினரின் விருப்பம். இத்தொகுதியில் அவர் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது என்று திருநெல்வேலியைச் சேர்ந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட அக்கட்சியின் மாநில துணை தலைவரும், சட்டப் பேரவை குழுவின் தலைவருமான நயினார் நாகேந்திரன் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே தேர்தல் பணிகளை தொடங்கியிருந்தார். திருநெல்வேலி சந்திப்பில் தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைத்திருந்தார். திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் மத்திய இணையமைச்சர் வி.கே. சிங்கை அழைத்துவந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என்று பல்வேறு வகையிலும் தேர்தல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

பாளையங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் நயினார் நாகேந்திரனும் ஒருவர். இதனால் அவரே இத் தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். இந்நிலையில்தான் பாஜக கூட்டணியில் சமக இணைந்திருப்பதால் திருநெல்வேலி தொகுதியை சமகவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் திருநெல்வேலி தொகுதியை பாஜக விட்டுக்கொடுக்காது என்றும் நயினார்நாகேந்திரன் நிச்சயம் போட்டியிடுவார். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து சரத்குமார் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடார் சமுதாய மக்கள் அதிகமுள்ள திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அனைத்து கட்சிகளும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு அளித்து வருவதுதான் அரசியல் கணக்கு. அது இம்முறை எவ்வாறு அமையப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெளிவாகிவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE