நெல்லையில் வாகன சோதனையில் சிக்கிய ரூ.1.27 கோடி: வருமான வரித் துறை விசாரணை

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திலும், மாநகர பகுதிகளிலும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு 2 கம்பெனி துணை ராணுப்படையினர் வந்துள்ளனர். திருநெல்வேலியில் 87 துணை ராணுப்படையினர் முகாமிட்டுள்ளனர். தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களுக்குமுன் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலியில் கொடி அணிவகுப்பையும் நடத்தியிருந்தனர். திருநெல்வேலி மாநகர காவல்துறையினர், ஆயுதப்படை காவலர்கள், அதிவிரைவு படையினரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகள், நாங்குநேரி டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகரில் பழைய பேட்டை, வி.எம். சத்திரம், கருங்குளம், டக்கரம்மாள்புரம், கேடிசி நகர், கரையிருப்பு, பேட்டை ஐடிஐ பகுதிகளில் இச்சோதனை நடைபெற்றது. அப்போது மத்திய துணை ராணுவப்படையினர் நடத்திய வாகன சோதனையின்போது வாகனங்களில் எடுத்துவரப்பட்ட ரூ.1.27 கோடி சிக்கியது. இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய துணை ராணுவ படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்குநேரியிலுள்ள டோல்கேட்டில் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்த காரை வழிமறித்து சோதனையிட்டபோது அதில் ரூ.1 கோடி இருந்தது.

காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் மதுரையில் கோதுமை வாங்குவதற்காக பணம் எடுத்து செல்வதாக தெரிவித்தார். அதற்கான ஆவணங்களையும் காண்பித்தார்.

இதுபோல் மற்றொரு காரில் நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளில் பூண்டு விற்பனை செய்துவிட்டு தேனியை சேர்ந்த வேல்முருகன் மற்றும் அவரது மகன் முருகேசன் ஆகியோர் காரில் ரூ. 27 லட்சம் கொண்டு வந்திருந்தனர்.

இதுகுறித்து நாங்குநேரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் அங்குவந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸார் ரூ.1.27 கோடியை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பணத்தை எடுத்து வந்தவர்களிடம் வருமான வரித்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE