சிறுமி கடத்தி கொலை: அரசைக் கண்டித்து மார்ச் 8-ல் புதுச்சேரியில் அதிமுக பந்த் அறிவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதுச்சேரி அரசைக் கண்டித்து மார்ச் 8-ல் அதிமுக பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது. இப்போராட்டம் புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். புதுவையில் திறக்கப்பட்டுள்ள ரெஸ்டோ பார்களில் கஞ்சா, ஹெராயின், எல்சிடி மாத்திரை என அனைத்து போதை வஸ்துகளும் தங்குதடையின்றி தாராளமாக கிடைக்கிறது. ரெஸ்டோ பார்களில் விடிய, விடிய இளைஞர்கள் கூட்டம் நடனம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு நடத்துகின்றனர்.போதை கும்பலால்தான் சீரழிவு தொடர்கிறது.

வார இறுதி நாட்களில் புதுவையில் அலங்கோலமான உடைகளில் சுற்றுலா என்ற பெயரில் நகர பகுதி முழுவதும் பெண்கள் வலம் வருகின்றனர். இதற்கு அரசு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். வருமானம் வருகிறது என்பதற்காக மக்கள் பாதிக்கப்படும் விஷயங்களை அரசு ஆதரிக்கக் கூடாது.

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர், தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரை அழைத்து உத்தரவிட வேண்டும். முத்தியால்பேட்டை காவல்நிலைய போலீஸார் மெத்தனமாக செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அங்குள்ள போலீஸாரை கூண்டோடு மாற்ற வேண்டும்.

போதைப்பொருள் விற்கும் பகுதிக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவையில் பாழடைந்த கட்டடங்களில் கஞ்சா கும்பல் தஞ்சமடைகிறது. ரோடியர் மில் மைதானத்தில் இரவில் நூற்றுக்கணக்கானவர்கள் மது அருந்துவதும், கஞ்சா புகைப்பதுமாக உள்ளனர். இதை அவ்வழியே செல்லும் போலீஸாரும் கண்டு கொள்வதில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமியை கஞ்சா போதை ஆசாமிகள் பாலியல் வன்கொடுமை செய்து துடிக்க துடிக்க கொலை செய்தது இந்திய அளவில் புதுச்சேரி மாநிலத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட அத்தனை போதை பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுவதால் நிகழ்கால இளைஞர்களின் வாழ்க்கை முற்றிலுமாக சீ்ரழிக்கப்பட்டு வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி, புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசை கண்டித்து வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அதிமுக சார்பில் முழு கதவடைப்பு பந்த் போராட்டம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மாநிலம் முழுக்க நடத்தப்படும். இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில்கொண்டு அதிமுக சார்பில் பந்த் போராட்டம் நடத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE