“ஒரு வாரத்துக்குள் நீதி கிடைக்க நடவடிக்கை” - புதுச்சேரி சிறுமிக்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர் தமிழிசை உறுதி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “புதுச்சேரி - முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் பெண் எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தப்படும். வேகமாக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து ஒரு வாரத்துக்குள் நீதி கிடைக்க வழி செய்வேன்” என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுவை முத்தியால்பேட்டை சோலைநகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் உடல் பிரேதபரிசோதனைக்கு பின்பு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதியளித்த பின், பெற்றோர்கள் சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். அதையடுத்து, சோலைநகரில் சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார்.

ஆளுநர் தமிழிசை அஞ்சலி செலுத்த வந்தபோது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, 'ஆளுநரே வெளியேறு' என்று கோஷம் எழுப்பினர். மேலும் 'குற்றவாளிகளை சுட்டுப்பிடி' என்றும் கோஷம் எழுப்பினர். பொதுமக்களின் எதிர்ப்புக்கு இடையே சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர் தமிழிசை, சிறுமியின் தாயை அரவணைத்து ஆறுதல் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

ஆனால், அவரை புறப்பட விடாமல் சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் அங்கிருந்து தமிழிசை வெளியேற முடியாமல் கைகோர்த்து நின்றனர். பின்னர் போலீஸார் இதில் தலையிட்டு பொதுமக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி ஆளுநரை வெளியே அழைத்து வந்தனர்.

எனினும், ஆளுநரை பின்தொடர்ந்து வந்த பொதுமக்கள், அவரின் கார் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். காவலர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். ஆளுநரை முற்றுகையிட்ட இடத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தனர். அந்த இடத்தில் ஒரு பெண் காவலர் கூட பாதுகாப்பில் இல்லை .

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “நான் நிலைக்குலைந்து போயுள்ளேன். இங்குள்ள பெண்கள் உணர்வுதான் எனக்கு இருக்கிறது. பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாக அறிந்தும் அக்குடும்பத்துடன் இருக்கவே வந்தேன். மக்கள் உணர்வாக பார்க்கிறேன். நான் அரசியலாகவோ, எதிர்ப்பாகவோ பார்க்கவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இதில் சலுகை கிடையாது. அரசிடம் பேசி, வேகமாக சிறப்பு விரைவு நீதிமன்றம் உடன் அமைத்து ஒரு வாரத்துக்குள் அக்குழந்தைக்கு நீதி கிடைக்க வழி செய்வேன்.

பெண் எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்துவேன். ஒரு வாரத்துக்குள் தீர்ப்பு வரும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். சிலர் நிற்க வைத்து சுடவும், தூக்குத் தண்டனை தரவும் கோரினர். அதை ஆமோதிக்கிறேன். போராட்டம் செய்பவர்களின் உணர்வை மதிக்கிறேன். வேறு நிகழ்வுகள் இதுபோல் நடக்கக்கூடாது. ஏற்கெனவே போதைப்பொருள் நடமாட்டம் இருக்கக்கூடாது என்று டிஜிபியிடம் சொல்லியுள்ளேன்.

போதைப்பொருள் இங்கு இருந்தால் இரும்பு கரம் கொண்டு அடக்கிக்கொண்டிருக்கிறோம். அதையும் மீறி இருந்தால் கட்டுப்படுத்தப்படும். தமிழகத்தில் போதைப்பொருளை உலாவவிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவோர் புதுச்சேரியில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்களையும் பிடித்து இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும். இதில் யாரும் தப்பிக்கவே முடியாது.

மக்கள் உணர்வோடும் இருக்கிறேன். மக்கள் விமர்சனத்தையும் ஏற்கிறேன். அதே நேரத்தில் அந்த தாயுடன் இருக்கிறேன். போதையால் என்று சொல்வதைவிட பாதை மாறிய இளைஞர்களாலும் வரும் சமூக அவலம் இது. இரு மிருகங்கள் பிடிக்கப்பட்டுள்ளன. உச்சப்பட்ச தண்டனை கிடைக்கும். அவர்கள் உடன் யாரும் இருந்தார்களா என்று விசாரித்து வருகிறோம். சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.

அதற்கான ஆணை உடனே பிறப்பிக்கப்படும். போதைப்பொருளை கட்டுக்குள் வைத்துள்ளோம். தமிழகத்தில் பிடிப்பட்டோரின் கூட்டாளிகள் இங்குள்ளதாகவும் அவர்கள் அரசியல் பின்புலத்துடன் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள். சமூகத்தில் எங்கேயும் இதுபோல் நடக்கக்கூடாது. அந்த தாயுடன் இருக்கிறேன். போராடினால் நானும்தான் இறங்கி போராடியிருப்பேன். கொலையாளிகள் மட்டுமல்ல, மிருகங்கள் தப்பிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி: சிறுமியின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவியர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிறுமி பயன்படுத்திய பள்ளி புத்தகங்கள், நோட்டுகள், பைகள், விளையாட்டுப் பொருள்களை வைத்து அதற்கு விளக்கேற்றி உறவினர்கள் துக்கத்தில் இருந்தனர். சிறுமியின் உடல் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு வைத்திக்குப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று பெற்றோர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE