சனாதன சர்ச்சை: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா மீதான வழக்குகளை முடித்துவைத்த சென்னை ஐகோர்ட் கூறியது என்ன?

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி.ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப் பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை’’ என்று பேசியிருந்தார்.

இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார். திமுக எம்பி, ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர், அமைச்சர் உதயநிதிக்கு எதிராகவும், மற்றொரு செயலாளர் கிஷோர் குமார் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் ஆ.ராசாவுக்கு எதிராகவும் கோ-வாரண்டோ எனப்படும் ரிட் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளில் நீதிபதி அனிதா சுமந்த் புதன்கிழமை தீர்ப்பளித்தார். அதில், இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை என்றாலும், மனுதாரர் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி வழக்குகளை முடித்து வைத்தார்.

‘அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அது முழுமையான புரிதலுடன் இருக்க வேண்டும். அந்தக் கருத்துகள் எந்த ஒரு நம்பிக்கைக்கும் அழிவை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது. ஆக்கபூர்வமான கருத்துகளையே தெரிவிக்க வேண்டும்.

பொது இடங்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் தெரிவிக்கும் கருத்துகள், உண்மை விவரங்களின் அடிப்படையில் துல்லியமாக இருக்க வேண்டும். எந்த கொள்கையை பின்பற்றுபவராக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் மட்டுமே அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத முடியாது. சனாதன தர்மத்தை எய்ட்ஸ், கரோனா, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது, இந்துத்துவத்தைப் பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது.

சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே, முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளின் அடிப்படையில், எந்த தகுதியில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிட முடியாது. எனவே, மனுதாரர்கள் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது’ எனக் கூறி, வழக்குகளை முடித்து வைப்பதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE