“பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறது எஸ்பிஐ” - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் முன்பாக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்றும் பாஜகவின் ஊழலுக்குத் துணை போகும் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக ஒலிக்கும் குரல் தமிழகத்தின் எதிர்ப்புக் குரலாக இருக்கப் போகிறது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின் ஜூன் 30 ஆம் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிட பாரத ஸ்டேட் வங்கி கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை அரசமைப்புச் சட்டத்திற்கும், அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்று கூறி கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை முடக்குகிற வகையில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட முயல்கிறது.

48 கோடி வங்கி கணக்குகளையும், 23,000 கிளைகளையும், 66,000 ஏ.டி.எம். மையங்களையும் பாரத ஸ்டேட் வங்கி இயக்குகிறது. 1990-களிலேயே கணினி மயத்தை தொடங்கி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருப்பது பாரத ஸ்டேட் வங்கியில் தான். இந்தச் சூழலில் 22,217 தேர்தல் பத்திர நன்கொடை குறித்த விவரங்களை வெளியிட 5 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளது பாரத ஸ்டேட் வங்கி. ஒரு கிளிக் செய்தாலே 5 நிமிடங்களில் அனைத்து விவரங்களும் வந்துவிடும். கால அவகாசம் கேட்க வேண்டிய அவசியம் என்ன ? தேர்தல் பத்திரங்களை வழங்குகிற உரிமை பாரத ஸ்டேட் வங்கியின் 29 கிளைகளுக்கு தான் வழங்கப்பட்டிருக்கிறது. 29 கிளைகளில் இருந்தும் தகவல்களைப் பெறுவது தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் கடினமான பணியல்ல.

பா.ஜகவுக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதை மூடி மறைப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி 5 மாதங்கள் கால அவகாசம் கேட்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. இன்றைய பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் மோடியின் நண்பர் அதானியின் தயவில் தான் பதவி நீட்டிப்பிலிருந்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டு ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் ஆளும் பாஜகவின் நிர்ப்பந்தத்தில் அவர் செயல்பட வேண்டியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பிப்ரவரி 15 ஆம் தேதி அளித்தது.

அதோடு, மார்ச் 6 ஆம் தேதிக்குள் மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேர்தல் நன்கொடை அளித்தவர்கள் விவரத்தை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் இந்த தகவலை தேர்தல் ஆணையத்திடமும் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த உத்தரவை முடக்குகின்ற வகையில் கால அவகாசம் கேட்பது பாஜகவின் ஊழலை தேர்தலுக்கு முன்பாக பாதுகாக்கிற முயற்சியாகவே கருத வேண்டியிருக்கிறது. இதன்மூலம் பாஜகவுக்கு யார், யார் நன்கொடை கொடுத்தார்கள்? நன்கொடை கொடுத்தவர்கள் பெற்ற கைமாறு என்ன? என்ற விவரங்கள் அம்பலமாகும் என்கிற அச்சத்தின் காரணமாகவே விவரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கி தடுக்கப்படுகிறது.

மத்திய பாஜக அரசின் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணைகள், சோதனைகள் முடிந்த பிறகு 30 நிறுவனங்கள் ரூபாய் 335 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை அளித்தது சமீபத்தில் அம்பலமானதை அனைவரும் அறிவார்கள். 2017 ஆம் ஆண்டு தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடந்த நிதியாண்டு வரை ரூபாய் 12,000 கோடிக்கு மேலாக நன்கொடைகள் கிடைத்துள்ளன.

இதில் பாஜகவுக்கு மட்டும் ரூபாய் 6,566 கோடி கிடைத்துள்ளது. மொத்த நன்கொடை பத்திரங்களில் இது 55 சதவிகிதம். நன்கொடை அளித்த பாஜகவின் நண்பர்கள் குறித்த தகவல்கள் பொதுவெளியில் வெளியானால் மத்திய அரசின் நேர்மையற்ற ஊழல் தன்மை வெளிப்படுவதோடு, குறிப்பிட்ட நிறுவனங்களுடனான நெருக்கம் தேர்தல் நேரத்தில் அம்பலமாகும் என்று பாஜக அரசு அஞ்சுகிறது. யார் நன்கொடை அளித்தார்கள், அவர்களுக்கு பிரதிபலனாக என்ன கிடைத்தது ? நன்கொடை அளித்தவர்களின் மீதான விசாரணை நிறுத்தப்பட்டதா? வலுக்கட்டாயமாக நன்கொடை வசூலிக்க அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டனவா? என்பன போன்ற விவரங்கள் வெளியாகும் என்ற அச்சம் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இன்றைய பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் மார்ச் 6 ஆம் தேதி அன்று தகவல்களை தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒரு நாளைக்கு முன்பாக பாரத ஸ்டேட் வங்கி அவற்றை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன்? எல்லாவற்றையும் கணக்கிட கணினி மயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியில் தகவல்களை வெளியிட ஒருசில நாட்களிலேயே முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், பாரத ஸ்டேட் வங்கி என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மிகப் பழமையான வங்கியாகும்.

மிகுந்த நம்பகத்தன்மை கொண்ட அரசுத்துறை வங்கியாகக் கருதப்படுகிற பாரத ஸ்டேட் வங்கி, பாஜகவின் நிதி முறைகேட்டை, தேர்தல் பத்திர நன்கொடை ஊழலை மூடி மறைக்க முயல்வதன் மூலம் தனது தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் இழந்து பரிதாபகரமான நிலைக்குச் சென்றுவிட்டது. இதன்மூலம் கருப்புப் பணத்தை மறைப்பதற்கு பாரத ஸ்டேட் வங்கியே துணை போவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

தேர்தல் பத்திர நன்கொடையில் மத்திய பாஜக அரசு நிதி குவிப்பதால் தேர்தல் களம் சமநிலைத்தன்மையோடு இல்லை. பாரபட்சமாக இருக்கிறது என்ற கோரிக்கையை முன்வைத்ததன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தகவல்களைப் பெறுகிற உரிமை ஒரு அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இதன்மூலம் சிதைக்க பாரத ஸ்டேட் வங்கி முயல்கிறது. இந்த தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட்டால் பாஜக ஆட்சி யாருக்காக நடைபெறுகிறது? எதற்காக நடைபெறுகிறது என்ற உண்மையை பொதுமக்கள் அறிந்து வாக்களிக்கும் போது சரியான முடிவை எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதைத் தான் ஒன்றிய பாஜக அரசு பாரத ஸ்டேட் வங்கி மூலம் தடுக்க முயல்கிறது.

எனவே, தேர்தல் பத்திர நன்கொடை விவரங்கள் நாட்டு மக்களுக்கு பொதுத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட மறுக்கிற பாரத ஸ்டேட் வங்கி பா.ஜ.க.வின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. இதன்மூலம் பாரத ஸ்டேட் வங்கி தனது நம்பகத்தன்மையை மட்டும் இழக்கவில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் செயல்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் மீது கருப்பு கறை படிந்திருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து நீதியை நிலைநாட்டும் என்று நம்புகிறோம்.

தேர்தல் ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கி சர்வாதிகார அரசியலை நிலைநாட்ட முயலும் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்படுகிற பாரத ஸ்டேட் வங்கியை கண்டிக்கிற வகையில் சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையிலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் . எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நாளை காலை 10.00 மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், நடுவண் அரசின் முன்னாள் அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள் - முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் இயக்கத்தினர் பங்கேற்று கண்டனத்தை வெளிப்படுத்த அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் முன்பாக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவின் ஊழலுக்குத் துணை போகும் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக ஒலிக்கும் குரல் தமிழகத்தின் எதிர்ப்புக் குரலாக இருக்கப் போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்