மயிலாடுதுறையில் களம் காணும் ஆசையில் குரு... சிஷ்யன்..!

By வீ.தமிழன்பன்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 1967-க்குப் பின் காங்கிரஸ் 7 முறையும், திமுக 3 முறையும், அதிமுக. தமாகா தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பின் 2019 மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக போட்டியிட்டு, மக்களவை உறுப்பினராக செ.ராமலிங்கம் வெற்றி பெற்றார். இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியில், இத்தொகுதியை கேட்டுப் பெற காங்கிரஸ் கட்சி முனைப்புடன் முயன்று வருகிறது.

ஒருவேளை இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும்பட்சத்தில், இங்கு போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது 83 வயதாகும் இவர் இதற்கு முன் இத்தொகுதியில் 1991, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். 2009 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் நோக்கத்துடன் அவ்வப்போது தொகுதியில் வலம் வரத் தொடங்கியுள்ளார். கடந்த டிசம்பர் 13-ம் தேதி சீர்காழி அருகே திருக்கருகாவூர், கடவாசல் கிராமங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், மயிலாடுதுறையில் நேற்று முன் தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில், முதல்வர் பார்வையில் படும்படி முதல் வரிசையில் மணிசங்கர் அய்யர் அமர்ந்திருந்தார்.

அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் அமர்ந்திருந்தார். விழா முடிந்த பின்னர் இருவரும் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்தனர். இதேபோல, மணிசங்கர் அய்யரின் தீவிர ஆதரவாளரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவருமான எம்எல்ஏ எஸ்.ராஜகுமாரும் இத்தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.

மணிசங்கர் அய்யர் ஒவ்வொரு முறையும் தேர்தலில் களம் காணும்போது, அவரது வெற்றிக்காக முழு மூச்சாக முன் நின்று தேர்தல் களப்பணியாற்றிவர் ராஜகுமார். இதனால் இந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் களம் காண்பது குருவா? (மணிசங்கரா), சிஷ்யரா? (ராஜகுமாரா) என்பது விரைவில் தெரிந்துவிடும் என்கின்றனர் அக்கட்சியினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE