பாமக, தேமுதிகவுடன் இன்று அதிமுக பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

பாமக மற்றும் தேமுதிக கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று அதிமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த முறை கொடுத்தது போலவே 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாகக்கூறி பாமகவுடன் கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாமக தரப்பில் தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரி பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

பாமகவின் பட்டியலில் உள்ள பெரும்பாலான தொகுதிகளையே தேமுதிகவும் கோருவதால் அதிமுக - பாமக கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அதிமுக - பாமக இடையே இன்று (மார்ச் 5) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதேபோன்று, தேமுதிகவுடனும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று அதிமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்கட்ட பேச்சு: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்ட குழு மார்ச் 1-ம் தேதி சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அதிமுக உடனான கூட்டணிக்கு தேமுதிக சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, ‘‘குழு அமைத்த பின்பு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றார்.

தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை சென்னையில் இன்று (மார்ச் 5) நடைபெறவுள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் நேரடியாக சந்தித்து பேசவுள்ளதாகவும், இதன் முடிவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘அதிமுக உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. அதிமுக தரப்பில் 4 இடங்கள் ஒதுக்க முன்வந்துள்ளனர். நாங்கள் 5 இடங்கள் கோரியுள்ளோம். மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, விருதுநகர் உட்பட சாதகமான தொகுதிகளின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு அறிவிப்பு வெளியாகும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE