பயங்கரவாதிகளுக்கு ஹவாலா பணம் அனுப்பிய விவகாரம்: சென்னை, கீழக்கரையில் என்ஐஏ சோதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி/ சென்னை/ ராமேசுவரம்: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்ததாகவும், அந்த இயக்கத்துக்கு சட்டவிரோதமாக ஹவாலா பணம் அனுப்பியதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சென்னை, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்பட நாடு முழுவதும் 17 இடங்களில் தேசியபுலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக, குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து7 துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள், 4 கையெறி குண்டுகள், 4 வாக்கிடாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் 6 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைதாகி, பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது, ஆயுள் தண்டனை கைதியாக அந்த சிறையில் இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தீவிரவாதி நசீர் அறிமுகமாகி உள்ளார். அப்போது, இவர்கள் 6 பேரையும் அவர் மூளைச் சலவை செய்துள்ளார். குறிப்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்துமாறு அவர்களிடம் நசீர் வலியுறுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு கடந்த அக்டோபரில் தேசிய புலனாய்வுமுகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள ஜுனைத் அகமது, முகமது உமர் கான், தன்வீர் அகமது, முகமது பைசல் ரப்பானி, முகமது பரூக்ஆகியோரது வீடு உள்ளிட்ட 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த டிசம்பர் 13-ம் தேதி சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்ததாகவும், அந்த இயக்கத்துக்கு சட்ட விரோதமாக ஹவாலா பணம்அனுப்பியதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த தமீம் ஆசிக் (23), புதுகிழக்குதெருவை சேர்ந்த அல் முபீத் (22)ஆகியோர் சென்னையில் ஹவாலாபண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், இருவரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அவர்களது வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தமீம் ஆசிக் வீட்டில் இருந்து கல்விசான்றிதழ்கள், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றையும், அல் முபீத் வீட்டில் இருந்து மடிக்கணினி, சிம் கார்டுகள், பென் டிரைவ் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல, சென்னை மண்ணடி மூர் தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது தளத்தில், 8 பேர்கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 லேப்டாப், 3 செல்போன், 4 சிம்கார்டு, ரூ.30,500 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூருவில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் இன்று ஆஜராகுமாறு ஹசன் அல் பஸ்ஸாம் (27), தமீம்அல் ஆசிக் (27) ஆகியோருக்கு அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளனர்.

ஆந்திராவில் கைதானவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு? - தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ (பிஎஃப்ஐ) அமைப்பின், தெலங்கானா வடக்கு பகுதி செயலாளராக இருந்தவர் அப்துல் சலீம். இவரை ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மைதுகூரு பகுதியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். விசாரணைக்காக அவரை ஹைதராபாத் கொண்டு சென்றுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் பகுதியை சேர்ந்த இவர், நாட்டுக்கு எதிராக இளைஞர்களை மூளைச் சலவை செய்து, வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு அனுப்பி ஆயுத பயிற்சி அளித்து வந்துள்ளார். இதுதொடர்பாக 2022-ல்இவர் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பின்னர் என்ஐஏக்கு மாற்றப்பட்டது. 2023-ல் மேலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்துல் சலீமை பிடித்து தருவோருக்கு ரூ.2 லட்சம் பரிசும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு ‘ராமேஸ்வரம் கஃபே’ ஓட்டலில் குண்டு வெடித்த சம்பவத்தில், அப்துல் சலீமுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்தும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE