போதை பொருள் விவகாரத்தில் இபிஎஸ் கேள்விக்கு முதல்வர் விளக்கம் தர வேண்டும்: ஜெயக்குமார் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கடலூரில் கடந்த 4-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘‘திமுக ஆட்சியில் எந்த குற்றமும் கூறமுடியாத நிலையில், போதைப் பொருள் குறித்து பழனிசாமி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 2 நாட்களுக்குள் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அதிமுகமுன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக இளைஞர்கள், மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்கள் எழுச்சிப் போர்’ தொடங்கினார். இதுகுறித்து விழிப்புணர்வு வீடி யோவும் வெளியிட்டார்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பிடிபட்டு ஒரு வாரம் ஆன நிலையில், இதுதொடர்பாக திமுக அரசோ, திமுகவோ எந்த விளக்கமும் தரவில்லை. இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பதில் அளிக்காமல், ஆர்.எஸ்.பாரதியை பதில் அளிக்க வைத்துள்ளார். அவரும் பிரச்சினையை திசை திருப்ப முயன்றுள்ளார்.

தமிழக இளைஞர்கள், மாணவர்களை சீரழிக்கக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்கதிமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஜாபர் சாதிக் ஏற்கெனவே போதைப் பொருள் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியுமா, தெரியாதா? இப்படிப்பட்டவருக்கு திமுக அயலக அணியில் உயர் பொறுப்பு வழங்கியதன் காரணம் என்ன?

முதல்வர் குடும்பத்தின் நெருக்கத்தைப் பயன்படுத்தி, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் அவர் வலம் வந்ததும், அதன்மூலம் போதைப் பொருள் நடமாட்டத்தை தமிழகத்தில் எவ்விதமான தடையுமின்றி விரிவுபடுத்தியதும் தெரியுமா, தெரியாதா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE